ஆங்கில மொழியில் இப்போட்டிகள் நடைபெறும். தரம் 1 முதல் தரம் 8 வரை கற்கும் மாணவர் இப்போட்டிகளில் பங்கு பற்றலாம். நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். ஆண்டுக்கு ஒருமுறை, ஒக்ரோபர் மாதத்தில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன.
ஏப்ரல் 1ஆம் நாளில் இருந்து யூலை 31ஆம் நாள்வரை விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பிக்கும் நாளன்று சொல்வண்டுக் கோவை தரப்படும்.
பிரிவு அ - தரம் 1, தரம் 2
பிரிவு ஆ - தரம் 3, தரம் 4
பிரிவு இ - தரம் 5, தரம் 6
பிரிவு ஈ - தரம் 7, தரம் 8
இப்போட்டியில் தங்கள் பிள்ளைகளை ஊக்கப்படுத்தி இணைப்பதன் ஊடாகக், கீழ்க்காணும் பயன்களை அவர்கள் அடையக் கூடியதாக இருக்கும்.
இலக்கணம் கற்றல்
புதிய சொற்களை அறிவதோடு, சொல்லின் பகுதி, விளக்கம், உச்சரிப்பு, பேச்சின் பகுதி, வாக்கியம் என்பவற்றை அறிவர்.
சொற்களஞ்சியம்
சொல்வண்டில் இணைவதன் ஊடாக பல புதிய சொற்களை அறிவார்கள். இது அவர்களின் வாசிப்பு மற்றும் எழுத்து வன்மையைக் கூட்டும் என்பதோடு பல வகையான நூல்களை வாசிக்க ஊக்கம் அளிக்கும்.
போட்டி உணர்வு
சொல்வண்டானது ஒரு பாதுகாப்பான போட்டிச் சூழலை உருவாக்குகின்றது. நட்பான இத்தகு சூழலில் போட்டியாளருக்குத் தன்னோடு போட்டி போடும் ஏனைய போட்டியாளரை தான் வெல்லல் வேண்டும் என்ற உணர்வு தோன்றும். மூளையின் செயற்பாடு அதிகரிக்கும். போட்டியைப் பார்த்துக் கொண்டிருப்பவருக்கும் இவ்வுணர்வு தோன்றும்.
அகன்ற அறிவு
சொற்களை அறிவது, அச்சொற்களின் வேர்களைத் தேடத் தூண்டும். சொல்லகராதிகளைப் படிக்கச் சொல்லும். இச்செயற்பாடானது, இளவயதிலேயே அவர்களைப் புதிய புதிய சொற்களை அறிவதற்கு வழிவகுக்கும்.
அறிவுத் திறன்கள்
சொல்வண்டானது உங்கள் குழந்தைகளின் அறிவுத் திறன்களை வளர்க்க உதவும். சூழ்நிலை அழுத்தத்தை கையாளும் திறன், நினைவாற்றல் திறன் என்பன பிற்காலத்தில் அவர்கள் உயர்கல்வி கற்கும் பொழுது அவர்களுக்குப் பெரிதும் பயன்படும்.
தன்னம்பிக்கை
சொல்வண்டு போன்ற போட்டிகளில் பங்குபற்றும் பொழுது, குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை பிறக்கின்றது. தலைமைத்துவப் பண்புகளை அறிகின்றனர். மக்கள் முன்னால் கூச்சம் இன்றிப் பேசும் ஆற்றலைப் பெறுகின்றனர். தவறுகளை ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில் மக்களின் பாராட்டுகளையும் பெறுவர்.
சில வேளைகளில் உங்கள் பிள்ளளைகள் வெற்றி பெறாமல் போனாலும் கூட, சொல்வண்டுப் போட்டியின் பொழுது அவர்கள் அதிக அளவிலான சொற்களையும் தன்னம்பிக்கையையும் பெறுவார்கள்.