வலைப்பதிவுகள் - Blogs

By கௌரி இரஞ்சன்  28 Mar, 2024
ஒரு நாட்டின் எதிர்காலத்தைப் பள்ளிகளின் வகுப்பறைகளே தீர்மானிக்கின்றன என்பது கல்வியியலாளர்களின் ஆணித்தரமான கருத்து. இதில் மாற்றுக் கருத்து யாருக்குமே இருக்க முடியாது. கனடாவில் தமிழர்களின் எதிர்காலத்தை மட்டுமல்ல, தமிழ் மொழியின் எதிர்கால இருப்பையும் தீர்மானிக்கப் போகிறவர்கள் இங்கு தமிழ் கற்கும் மாணவர்களே. ஆனால் கனடா வாழ் தமிழ் மாணவர்கள் தம் தாய் மொழியைக் கற்பதில் பல்வேறு சிக்கல்களை எதிர் கொள்கிறார்கள். குறிப்பாக பதின்ம வயதினர் தம் தாய் மொழியைக் கற்பதில் ஆர்வமற்று அதைக் கற்காமல் விடுவதற்குப் பல்வேறு காரணங்களை முன்வைக்கின்றனர்.
இவற்றை நாம்

1. பெற்றோர் சார்ந்தவை.
2. ஆசிரியர் சார்ந்தவை.
3. மாணவர் சார்ந்தவை.
4. சூழல் சார்ந்தவை.
எனப் பிரித்து நோக்கலாம்.

பெற்றோர்கள் சிறுவயதில் இருந்தே தாய் மொழியோடு எம்மை இணைத்து வழி நடத்தவில்லை. அதனால் பதின்ம வயதில் எமக்குத் தமிழ் படிக்க விருப்பமில்லை என்கின்றனர் பிள்ளைகள். அது உண்மைதான். புலம் பெயர்ந்த தமிழ்ப் பெற்றோர்கள் புதிய சூழலையும் வேலை, பொருளாதாரம் ஆகியவற்றையும் புரிந்து நிமிர்வதற்கு நீண்டகாலம் எடுக்கிறது. இக்கால கட்டத்தில் வாழிட மொழியில் தம் பிள்ளைகள் முன்னுக்கு வரவேண்டும் என்ற குறிக்கோளுடன் பெற்றோர் செயற்படுவதால் தாய் மொழி பற்றிச் சிந்திக்க பலபேர் தவறி விடுகின்றனர். இந்நிலை தாய் மொழி மறந்த அல்லது தெரியாத பதின்ம வயதினரை உருவாக்கி விடுகிறது.

அதுமட்டுமன்றி வீட்டு மொழியாகக்கூடத் தமிழைப் பயன்;படுத்தத் தவறி விடுகிறார்கள். 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு நறுமணம் அதிகம்' என்பது போல் ஆங்கில மொழி மீதான பெற்றோர்களின் ஆர்வம் தமிழ் தெரியாத இளம் தமிழ்த் தலைமுறையை உருவாக்கி விடுகிறது. ஆனால் தமிழில் திறமைத் தேர்ச்சியைப் பெறமுடியும் என்று அறியும் பெற்றோர் தமிழில் அடிப்படை அறிவே இல்லாத பிள்ளையை இந்த வகுப்புகளில் சேர்க்கிறார்கள். இதனால் பிள்ளைகள் குழப்பம் அடைந்து தமிழை வெறுக்கிறார்கள். சிறு வயதில் இருந்து தமிழைக் கற்பிக்காமையினால் தமிழ் அவர்களுக்குக் கடினமாகத் தெரிகிறது. திறமைத் தேர்ச்சி வகுப்புகளில் பாடங்கள் விளங்கவில்லையென்றால் சலிப்பு ஏற்படுவது இயற்கைதானே.

மாணவர் சார்பான காரணங்களை நோக்கும் போது நாளாந்தப் பள்ளி தவிர பல வகுப்புகளுக்கு பிள்ளைகள் செல்கிறார்கள். இதனால் தமிழ் படிக்க நேரம் இல்லை என்கிறார்கள். எழுதுதல், படித்தல் தவிர ஆர்வமூட்டும் செயற்பாடுகள் எதுவும் தமிழ் கற்றலில் இல்;லை என்கின்றனர். விரும்பிக் கற்கும் வகையில் ஆசிரியர் கற்பிக்கவில்லை. அதனால் தமிழ் வகுப்புகளுக்குப் போக எங்களுக்கு விருப்பம் இல்லை என்கின்றனர். ஆம் இதுவும் ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணமாகத்தான் இருக்கிறது.

வளர்ச்சி அடைந்த ஒரு நாட்டிலே ஒரு இனம் தனது தாய் மொழியை மூன்றாம் மொழியாகக் கற்பிக்கிறது என்பது எளிதான விடயமல்ல. பல் பண்பாடும் திரும்பிய பக்கமெல்லாம் கவனக் கலைப்பான்களும் நிரம்பி வழியும் ஒரு நாட்டில் தாய்மொழியின் பால் தமிழ் இளையோரின் கவனத்தை ஈர்ப்பதில் ஆசிரியர்களின் பங்கும் பணியும் முக்கியமானது. தாய்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுடைய கற்பித்தல் தொடர்பான அனைத்துச் செயற்பாடுகளும் மாணவர்களை மகிழ்ச்சியோடு இலக்கை நோக்கி அழைத்துச் செல்வதாக அமைய வேண்டும். பாடத்தைத் திட்டமிட்டு இன்முகம், இன்சொல், இன்செயல்கள் கொண்டு ஆசிரியர் கற்பித்தால் மாணவர்கள் விருப்போடு பள்ளிக்கு வருவர். பாடத்தையும் விரும்பிக் கற்பர்.

மாணவர்கள் விரும்பும் செயற்பாடுகள் மூலம் மொழியைக் கற்பித்தல், மாணவர்களின் தனியாள் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேம்படுத்த வழி காட்டுதல், வாய்ப்புகளை ஒவ்வொரு மாணவர்களுக்கும் வழங்குதல். நேர முகாமைத்துவம் மூலம் எவ்வாறு நாளாந்தப் பள்ளி வீட்டு வேலைகளுக்கும் தமிழ்ப்பாட வேலைகளுக்கும் இடையே எழும் முரண்பாடுகளைக் களைதல். இவையெல்லாம் கனடாவாழ் இளம் தமிழ்த் தலைமுறையை தாய் மொழிக் கல்வியை விரும்பிக் கற்கச் செய்யும் செயற்பாடுகள் ஆகும்.

தமிழ் மொழி தொன்மையான பாரம்பரியமிக்க அழகிய செம்மொழி ஆகும். தமிழ் படித்தாலும் தரணி ஆள முடியும். சிறப்புமிக்க தமிழ் மொழியை அழிய விடாமல் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வது பதின்ம வயதுத் தமிழ் மாணவர்களுடைய கடமையாகும். அத் தலையாய கடமையை பெற்றோர்களும் ஆசிரியர்களும் தமிழ் மாணவர்களும் சிறப்பாகச் செய்து உலக மொழிகளில் தமிழ் மொழியே முதன்மையானது என்று உலகுக்குப் பறைசாற்றிப் பெருமை கொள்ள வேண்டும்.

ஆக்கம்: கௌரி இரஞ்சன்  
ஆசிரியர், கனடாத் தமிழ்க் கல்லூரி
By கலாநிதி குலமோகன் 28 Mar, 2024
பண்டைத் தமிழர்களது வாழ்வு இயற்கையோடு இயைந்து இருந்தது. ஐவகை நிலங்களான குறிஞ்சி. முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பவற்றில் முதற் பொருள், கருப் பொருள், உரிப் பொருள் என்ற அடிப்படையில் எமது முன்னோர் வாழ்ந்த அன்பு வாழ்வு பண்டைத் தமிழ் இலக்கியங்களில் மிக அழகாகப் பதிவு செய்யப் பட்டிருக்கின்றது. அகம் என்ற தூய அன்பும், புறம் என்ற அஞ்சாத வீரமும் பதினெண் மேற் கணக்கு நூல்களான எட்டுத் தொகையிலும், பத்துப் பாட்டிலும் பொதிந்து கிடக்கின்றன. இயற்கை நெறிக் காலத்தில் காதலும் வீரமும் சிறப்பிடம் பெற்றிருந்ததைப் போல வேறு எக்காலத்திலும் இவை சிறப்பிடம் பெறவில்லை.

தமிழர்களின் மிகப் பழைய இலக்கியம் சங்க இலக்கியம் ஆகும். இரண்டாயிரம் ஆண்டு தொன்மை உடையதாகவும், ஆரியக் கலப்பு அதிகம் இடம் பெறாததாகவும் அமைந்த தமிழ் நாகரிகம் சங்க கால இலக்கியங்களில் இருந்தே அறியப்படுகின்றது. இந்த வீர ஊழி என்று அழைக்கப்படும் சங்க காலத்தில் வீரம் பெற்றிருந்த சிறப்பு மிக முக்கியமானதாகும். சங்க கால இலக்கியங்களில் தமிழர்களின் வாழ்வியல் மரபுகள் பல காணப்படுகின்றன. அவற்றுள் வழிபாட்டு மரபும் ஒன்றாகும். இந்த வழிபாட்டுப் பாரம்பரியத்தில் வீர வணக்கம் பெற்றிருந்த இடம் சிறப்பானதாகும்.

'ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிரேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்ததெனக்
கல்லே பரவினல்லது
நெல்லுகுத்துப் பரவுங் கடவுளு மிலவே' (புறம் -335 -மாங்குடிக் கிழார்)

போரில் பகைவர்கள் முன்னேறி வருவதைத் தடுத்து யானைகளைக் கொன்று வீரச்சாவடைந்த வீரனது நடுகல்லைக் கடவுளாகக் கருதி வழிபடுவதை விட நெல்லைச் சொரிந்து வழிபடும் வேறு தெய்வம் இல்லை என்பது இந்தப் பாடலின் பொருள் ஆகும்.

வீர வணக்க வழிபாட்டில் சடங்கு மற்றும் நினைவுச் சின்னம் தொடர்பான இரு நிலைகள் காணப்பட்டன.
வீர வணக்கம் சார்ந்து, இந்த இரு முறைமைகளும் சங்க இலக்கியத்தின் பாடு பொருளாகின. வெட்சித் திணைகளுக்கான துறைகளைக் கூறும் போது தொல்காப்பியர் நடுகல் வழிபாட்டு முறைக்கும் இலக்கணத்தை வரையறை செய்துள்ளார்.

'காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென்
றிருமூன்று வகையிற் கல்லொடு புணரச்
சொல்லப் பட்ட வெழுமூன்று துறைத்தேழூ' (தொல்காப்பியம் - புறத்திணையியல்)

செங்குத்தாக நடப்பட்ட நடுகல்லிலே வீரச் சாவடைந்த வீரனின் உருவம் செதுக்கப்பட்டது. பின்னர் வீரனின் பெயர், வீரன் வீரச்சாவடைந்த போர்க்களம் அல்லது இடம் என்பன அக் கல்லில் பொறிக்கப்பட்டன. காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல், பெரும்படை, வாழ்த்துதல் என்ற ஆறு வழக்காறுகள் நடுகல் வழிபாட்டின் நடைமுறைகள் ஆகும். இந்த விதிமுறைகளைப் பின் பற்றி நடுகல் வழிபாடு நடைபெற்றது.

நடுகற் பீலி சூட்டி நாரரி
சிறுகலத் துகுப்பவுங் கொள்வன் கொல்லோ (புறநானூறு- 232 ஒளவையார்)

அதியமானது நடுகல்லைக் கண்டு ஒளவையார் கையறு நிலையில் பாடும் பாடல் இதுவாகும். நடுகல் ஆனவர்கள் காவற் தெய்வங்களாகவும், குல தெய்வங்களாகவும் கருதப்பட்டனர், தாம் வேண்டும் வரங்களைத் தருவார்கள் என்ற நம்பிக்கையும் அக்கால மக்களிடையே இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.

சங்க காலச் சமுதாயத்தில் போர் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. மக்களிடம் வீர உணர்வு மேலோங்கிக் காணப்பட்டது. 'போர் எனில் புகலும் புனைகழல் மறவர்' என்று புறநானூறு ( புறம்-31) எம் முன்னோர்களைப் பற்றிக் கூறுகின்றது. ஆண்கள் மட்டுமன்றிப் பெண்களும் வீரம் மிக்கவர்களாக இருந்தார்கள். தனது ஒரே மகனைப் போர்க்களம் நோக்கிச் செல்க! என்று அனுப்பிய வீரத் தாயையும், (புறம்- 279) உன் மகன் எங்கே? என்று கேட்டவருக்கு நான் பெற்றெடுத்த மகன் ஒரு புலி ஆவான். அவனைக் காண வேண்டும் என்றால் போர்க் களத்திலே தோன்றுவான் போய்ப் பார் (புறம்- 86) என்று பதில் கூறிய தாயையும், எனது மகன் போர்க்களத்திலே புறமுதுகு காட்டி ஓடி இருந்தால் அவனுக்குப் பாலூட்டிய எனது மார்பகங்களை அறுத்தெறிவேன் (புறம் 278) என்று கூறிய தாயையும், போர்க்களம் சென்று விழுப்புண் பட்டு வீரச்சாவடைந்த தம் கணவனைக் காணும் மனைவியின் வீரத்தையும் நாம் காண்கின்றோம். இந்த வீரத் தாய்மார்களின், வீரப் பெண்களின் மற மாண்பு பழந்தமிழர் பண்பாட்டின் தொடுமுடி ஆகும்.

ஆடு என்ற சொல் வெற்றி என்னும் பொருளில் பெரிதும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. போரில் வெற்றி பெறும் வீரன் ஆடவன், அல்லது ஆடவர் என்ற சொல்லுக்கு உரியவன் ஆகின்றான். இந்த ஆடவனை வீரன் என்று அழைக்கும் அளவிற்கு வீரம் அக்காலத்தில் முதன்மை பெற்றிருந்தது.

தாய் ஈன்று புறம் தர, தந்தை சான்றோனாக உருவாக்க, வேல் உருவாக்கித் தருபவர் தனது கடமையைச் செய்ய, அரசன் படைக்கலப் பயிற்சிகளையும், போராண்மையையும், ஊராண்மையையும் கற்பிக்க, மகனானவன் நாட்டைப் பகைவன் தாக்கும் போது, ஒளி பொருந்திய வாளினைத் தாங்கிச் சென்று, பகைவரின் யானைகளைக் கொன்று, பகைவரை அடக்கி வெற்றியோடு மீள்வான். இவ்வாறு சமூகத்தால் வளர்த்தெடுக்கப் பட்ட வீரனுக்குரிய நற்பண்புகளோடு உருவான வீரன் சான்றோன் ஆனான். (புறம்191, புறம் 195)

இத்தகைய நற்பண்புகள் கொண்ட ஒரு வீரன் வீரச்சாவடைந்த போது அந்த முழுச் சமுதாயமுமே சோகத்தில் ஆழ்ந்தது. ஒரு வீரனின் வீரச் சாவு, எவ்வாறு ஒரு முழுச் சமுதாயத்தின் இழப்பாக அமைந்தது என்பதைப் பாடு பொருளாகக் கொண்ட பல பாடல்கள் சங்க இலக்கியங்களிலே காணப்படுகின்றன.
(எ.கா. புறம் -242 இளையோர் சூடார் குடவாயிற் கீரத்தனார்.

இவ்வாறு மாடு பிடி சண்டையான வெட்சிப் போரிலும், கரந்தைப் போரிலும், ஏனைய போர்களிலும் போர்க் களங்களிலும் விழுப்புண் ஏற்று, வீரத் தழும்புகளோடு மானச் சாவடைந்த வீரர்களுக்கு அன்றைய பழந் தமிழர் சமுதாயம் நடுகல் (வீரக் கல், நினைவுக் கல்) வைத்து வீர வணக்கம் செலுத்தி வழிபட்டது. இது தமிழர்களின் மிகச் சிறந்த சால்பு ஆகும்.

பண்டைத் தமிழர்களின் மிகச் சிறந்த சால்பான நடுகல் வழிபாட்டு முறைமையையும், இந்த நடுகல் வழிபாட்டுக்குரிய மாவீர்களையும், துயிலும் இல்லங்களின் எழுகையையும், மானச்சாவடைந்த வீரர்களது சாவு ஏற்படுத்திய துயரத்தையும், எல்லோரது விழிகளிலும் கண்ணீர் வழிவதையும், ஈழத் தமிழர்கள் அவர்களை நினைவேந்தி நிற்பதையும் நாம் இன்று எமது கண் முன்னால் காண்கின்றோம். இந்த நினைவேந்தலில்,

ஆழக் கடலெங்கும் சோழ மகராசன் ஆட்சி புரிந்தானே அன்று
தமிழ் ஈழக் கடலெங்கும் எங்கள் கரிகாலன் ஏறி நடக்கின்றான் இன்று.
காலை விடிந்ததென்று பாடு, சங்க காலம் திரும்பியது ஆடு.

என்ற தாயகப் பாடல் செவி வழி நுழைந்து உணர்வுகளில் நிறைகின்றது.

மற மானம் மாண்ட வழிச் செலவு தேற்றம்
என நான்கே ஏமம் படைக்கு ( திருக்குறள் -படைமாட்சி -567)

ஆக்கம்: கலாநிதி குலமோகன்
ஆசிரியர், கனடாத் தமிழ்க் கல்லூரி
By திலகவதி சின்னப்பு 28 Mar, 2024

'எம்மை ஈன்ற தாயும் தாய் தந்த தாய்மொழியும் எம்மிரு கண்கள்'. தாயின் மடியில் குழந்தையாய் அறிந்து கற்ற முதல் மொழி தாய்மொழி ஆகும். தாயானவள் குழந்தைக்கு உணவூட்டுவதோடு தாய்மொழி உணர்வையும் ஊட்டுகின்றாள். அதற்குப் பயன்படுவது தாய்மொழியே. தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை என்பது போல தாய்மொழியைப் போல் வேறு மொழியில்லை என்பது அறிஞர்களின் கருத்தாகும். ஒருவன் எத்தனை மொழி வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம், ஆனால் சிந்திப்பதற்கும், அறிவை வளர்ப்பதற்கும், முடிவுகளை எடுப்பதற்கும் அடிப்படையாக அமைவது தாய்மொழியே ஆகும்.

தாய்மொழி மூலம் கல்வி பயிலும் குழந்தையாலேயே தனது இயல்புகளுக்கேற்ப நிறைந்த திறன்களை வெளிக்காட்டமுடியும் என்பது கல்வி உளவியலாளர்கள் கருத்தாகும். இதனால் தான் உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் கல்வி தாய்மொழியிலேயே புகட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. உலகின் முன்னணியில் உள்ள நாடுகளும், அறிஞர்களும் தாய்மொழியிலேயே கல்வி கற்றவர்களாக உள்ளார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி, யப்பான் போன்ற நாடுகளில் தத்தம் மொழிகளிலேயே கல்வி கற்பிக்கப்படுகின்றன. தாய்மொழி மூலம் கல்வி பயின்ற நிபுணர்களையும், அறிவியலாளர்களையும் கேட்டால் சிந்தனை வளர்ச்சிக்குத் தாய்மொழியே உகந்தது எனக் கூறுகின்றனர்.

இன்று புலம்பெயர் நாடுகளில் வாழும் எம் பெற்றோர்கள் ஆங்கில மொழியே உயர்கல்விக்கு ஏற்ற மொழி என நம்புகின்றனர். எமது தாய்மொழி மூலம் எதையும் சாதிக்க முடியாது எனக் கூறுகின்றனர். ஆனால் புலம்பெயர் நாடுகளில் ஆங்கில மொழி மூலம் கல்வி பயின்றோரிலும் பார்க்கத் தாய்மொழி மூலம் கல்வி பயின்றோரே சிறந்த அறிவியலாளர்களும், பொறியியலாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும் உள்ளனர் என்பதை மறுக்க முடியாது.

இலங்கையில் நடந்த திட்டமிட்ட இன அழிப்புப் போரில் நாம் இழந்தவை பல. ஆனாலும் எம்மோடு நாம் மொழியையும் மொழியோடு கலந்த பண்பாடுகளையும் எடுத்து வந்தோம். எமது தாய்மொழியே எமது வேராக உள்ளது. அதுவே எமது அடையாளம். எமது அடையாளத்தைத் தொலைத்து விடாமல் எமது தலைமுறையை வளர்த்தெடுக்க வேண்டும். தாய்மொழி மீது பற்றுக் கொள்ள வேண்டும். பெற்ற தாயைக் காட்டிலும் நம் தாய்மொழி உயர்ந்தது ஆகும். உலகில் பிறக்கும் ஒவ்வொரு தமிழ்ப் பெற்றோரின் குழந்தைகளும் தாய்மொழியில் பேசவும் எழுதவும் தெரிந்த குழந்தைகளாக வளர வேண்டும். அப்படி ஒரு நிகழ்வு நடக்கும்போது மட்டுமே எமது தலைமுறையைப் பண்பாடு, பழக்கவழக்கம் உள்ளவர்களாக வளர்க்க முடியும். தாய்மொழி மூலம் தான் பண்பாடு பின்பற்றப்படுகிறது.

நாம் வாழும் நாடுகளில் தாய்மொழி தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் தாய்மொழியே எமது அடையாளம் என்பதை மறுப்பதற்கில்லை. தாய்மொழியைக் கற்பித்தற்குரிய அனைத்து வசதிகளையும் பெற்றோர் தமது வருங்காலச் சந்ததியினருக்காக பயன்படுத்த வேண்டும்.

நூலகங்களில் உள்ள தமிழ் நூல்கள், தன்னார்வ நிறுவனங்களால் வழங்கப்படும் தமிழ் வகுப்புகள், அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட வகுப்புகள் என்பவற்றைச் சரிவரப் பயன்படுத்தப்பட வேண்டும்.

1950இல் பொதுவுடமைப் புரட்சி மூலம் சீனாவும், இரண்டாம் உலகப்போரில் மிக அழிவைச் சந்தித்த யப்பானும் மீள உருப்பெற்று உலகின் முன்னணி நாடுகளாக விளங்கக் காரணம் அவர்கள் தாய்மொழிக் கல்வி மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு இளந்தலைமுறையினரை தட்டி எழுப்பி விட்டமையே ஆகும். தாய்மொழியின் மீது ஒவ்வொரு பெற்றோரும் பற்றுக்கொண்டு, இதுவே எமக்கு வேராக அமையப் போகின்றது என்பதை இளம் தலைமுறையினருக்குத் தாய்ப் பால் ஊட்டுவது போல் ஊட்ட வேண்டும். மக்களின் ஆதரவால் அரசியல்வாதிகளாக ஆகிவிடலாம். ஆனால் ஒரு துறையில் நிபுணர்களாக உயரத் தாய்மொழிக் கல்வி அவசியமானதாகும்.

தாய்மொழி அறிவும், பேச்சும், எழுத்தும், ஆராயும் திறனும் தமிழ் இளையோருக்கு இருக்க வேண்டும். தாய்மொழி இழந்தவன் உலகில் முகவரி இல்லாதவன் என்ற நிலை உருவாக வேண்டும். தாய்மொழியை விடுத்து அந்நிய மொழியில் கல்வி பயில நினைப்பது அழகாகாது. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தாய்மொழியில் பெயர்த்தல் வேண்டும். தாய்மொழியில் அறிவியல், கலைகள் கற்றிடும் வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற பாரதியின் கனவுக்கு உயிர் கொடுப்போம். தாய்ப்பாலே உடல் நலத்திற்கு உகந்தது. தாய்மொழியே சிந்தனை வளர்ச்சிக்கும், முடிவுகளை எடுக்கவும் சிறந்தது.

புத்தம் புதிய கலைகள் - பஞ்ச

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்

மெத்த வளருது மேற்கே – அந்த

மேன்மைக் கலைகள் தமிழில் இல்லை

சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

உலகில் எந்த மொழி அதிகமாகப் பேசப்படுகின்றதோ அந்த மொழியே வாழும் மொழியாகும். தாய்மொழியும் அதனோடு சேர்ந்த பண்பாடுகளின் பெருமையும் அதன் தொன்மையில் இல்லை. அதன் தொடர்ச்சியிலேயே உள்ளது என்பதை உணர்ந்து தமிழ்மொழியைப் பேசுவோம், எழுதுவோம், தாய்மொழியை இழக்காத தமிழராய் வாழ்வோம்.

ஆக்கம்: திலகவதி சின்னப்பு

ஆசிரியர், கனடாத் தமிழ்க் கல்லூரி

By துசி பாலமோகன் 27 Mar, 2024

உலகின் மூத்த மொழி என்று வரலாற்று ஆய்வாளர்களால் போற்றப்படும் மொழி எம்முடைய தமிழ்மொழி ஆகும். பதின்நான்கு மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்த சுப்பிரமணிய பாரதியார் 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' எனக் கூறி தமிழ் மொழியினைச் சிறப்பித்துள்ளார்.

தொன்மை

உலகில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன என்பர், அமரர் கி.ஆ.பெ. விசுவநாதம் உலகமொழிகள் 2735 எனக் குறிப்பிட்டுள்ளார் என்பர். இவற்றுள் சுமார் 700 மொழிகளுக்கே எழுத்துகள் உள்ளன. உலக மொழிகளை அவற்றிற்கிடையே உள்ள தொடர்பு, உறவு, அமைப்பு, பிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல மொழிக் குடும்பங்களாகப் பாகுபடுத்தி உள்ளனர். அவ்வகையில் திராவிட மொழிகளுள் முதன்மையானதும் செழுமையானதும் தமிழ்மொழி ஆகும். மொழியின் தொன்மையினால், இடத்தினால், சிறப்பினால் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தன்மைகள் உண்டு. அவை மொழியின் சிறப்பினை என்றும் பறை சாற்றிக் கொண்டிருக்கும். அத்தகு தனித்தன்மைகள் தமிழ்மொழிக்கும் அமைந்துள்ளன.

'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு

முன்தோன்றி மூத்த குடி'.

தொன்மை வாய்ந்த தமிழ்மொழி இன்றும் உயிரோட்டத்துடன் உள்ள மொழியாகும். செம்மொழியாம் தமிழுக்குத் தொன்மை, பொதுப்பண்பு, நடுவு நிலைமை, தாய்த்தன்மை, பண்பாடு, இலக்கிய வளம், உயர்சிந்தனை போன்ற பண்புகள் உள்ளன.

வளம்

தமிழ்மொழி இலக்கிய, இலக்கண வளமிக்கது. தொன்மையான இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு அக்கால மக்களின் காதல் வாழ்க்கை, வீரவாழ்க்கை, கொடைத்தன்மை போன்றவற்றை எடுத்தியம்பும். தமிழ்மொழியில் அறநூல்கள் உள்ளன. திருக்குறள், நாலடியார் என்பன நாம் அறிந்ததே. உள்ளம் உருக்கி இறையருளை நாடச் செய்யும் பக்தி இலக்கியங்கள் தமிழ் மொழியில் மிகுதியாக உள்ளன. தமிழில் அமைந்துள்ள ஆற்றுப்படை இலக்கியங்கள் மன்னர்களிடம் உதவி பெறுபவர்கள், நாம் பரிசு பெற்ற மன்னர்களின் பெருமைகளைக் கூறி ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளன.

தொல்காப்பியம் மிகவும் தொன்மையான முழுமையான இலக்கண நூல். இதிலிருந்து யாப்பிலக்கணம், தண்டியலங்காரம் போன்ற பல இலக்கண நூல்கள் தோன்றியுள்ளன. தமிழ் மொழியின் இனிமை எளிமை, தெளிவு, தொன்மை, பரப்பு என எல்லாவகையிலும். கண்டும் கேட்டும் சுவைத்தும் பயனுற்றோர், அதன் பெருமையை இலக்கியங்களும் அறிஞர்களும் உரைத்துள்ளனர்.

'என்றுமுள தென்றமிழ் இயம்பியிசை கொண்டான்' என்பது கம்பராமாயாணம்.

தமிழ்மொழி பெற்றிருக்கும் எண்ணி மதிப்பிடற்கியலாச் சொற் செல்வங்களும் செந்தமிழ் மொழியின் பல்வேறு வகைப்பட்ட இலக்கண வடிவங்களும் அம்மொழிப் பழைமையை நிலை நாட்டும் நல்ல சான்றுகள்' என்பது திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்.

பழைய இலக்கண இலக்கியங்களிலும் ஆவணங்களிலும் வரும் கலைச் சொற்கள் பழந்தமிழரின் தொழில்நுட்பத் திறனை அடையாளப்படுத்துகின்றன. இன்றும் பழங்கால மரபுகளைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்ற கோயிற் கட்டடக் கலைஞர்கள், சிற்பக் கலைஞர்கள், ஓவியக் கலைஞர்கள் போன்ற பல நுண்கலைகளில் ஈடுபடுவோர் இடையே பன்னூறு கலைச்சொற்கள் வழக்கில் உள்ளன

மரவேலை செய்பவர்களை 'மரங்கொல் தச்சன்' என அழைத்தனர். மழு, உளி, முடுக்கு, எறிகுறடு என்பவை இவர்கள் பயன்படுத்திய சொற்களாகும். உணவு சமைக்கும் இடத்தை 'அட்டில்' என்றனர். இட்டலியின் பழைய வடிவம் இட்டவி. பழம் பண்பாட்டைச் சார்ந்த பல்வேறு சொற்களும் வளமான சொற்களஞ்சியம். இவற்றைக் கண்டறிந்து பயன்படுத்துவோம்.

ஓர் இனத்தின் தொன்மையான வரலாறு அவ்வினம் தொன்று தொட்டு வாழ்ந்து வரும் பகுதிகளில் நடத்தப்பெறும் தொல்லியல் அகழ்வாய்வுகள் மூலம் கிடைக்கப் பெறும் சான்றுகள் இலக்கியங்கள், வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகள், வெளிநாட்டவரின் பயணக் குறிப்புகள் மூலம் உறுதி செய்யப்படுகின்றன.

அண்மையில் கந்தரோடை, மாந்தை போன்ற இடங்களிலும், கீழடி அகழ்வாய்வு கண்டுபிடிப்பிலும் கிடைத்த ஆய்வின் முடிவுகள் தமிழின் தொன்மைக்கு மேலும் சான்றாக அமைந்துள்ளன.

என் உயிரினும் மேலான தமிழே! உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துகிறேன்! பேணுகிறேன்! வணங்குகிறேன்! தமிழின் தொன்மை அறிவோம்! தேடுவோம்! பேணுவோம்!

ஆக்கம்: துசி பாலமோகன்
ஆசிரியர், கனடாத் தமிழ்க் கல்லூரி

By கேதீஸ்வரி இரஞ்சன் 27 Mar, 2024

'உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகிறது என்பது பொருள்' என்கிறது பிரான்சியப் பழமொழி. கனடா நாடு எமது மொழிக்கு சிறந்த அங்கீகாரத்தைத் தந்திருக்கிறது. இருப்பினும் எம்மவர் பலர் தமிழ் மொழியைப் பேசவோ, கற்கவோ விரும்புவதில்லை. ஒரு இனம் தலைநிமிர அதன் மொழியே காரணம். ஒரு மொழி செம்மொழியாகப் போற்றப்பட அதன் இலக்கிய இலக்கண செழுமையே காரணம். செம்மொழி நிலைபெற்ற மொழிகளில் ஒன்று எமது தாய்மொழி தமிழ் ஆகும். 'தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்றார் பாரதி. பாரதியின் கனவு நனவாகிப் பல ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இன்று வீடுகளில் தமிழ் இல்லாது போய்க் கொண்டிருக்கின்றன. எமது அடையாளங்களை, பண்பாட்டை விட்டுக்கொடுக்க நாம் தயாராகிவிட்டால் அது எமது பிறப்புரிமையை விட்டுக் கொடுப்பது போன்று ஆகிவிடும்.

கனடாவில் இருக்கும் தமிழ்ப் பிள்ளைகளில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே தமிழ் கற்கின்றனர் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அப்படியாயின் மூன்றில் இரண்டு மடங்கு பிள்ளைகள் எம் உயிரினும் மேலான எமது தமிழ் மொழியை எவ்வாறு காப்பர்?

கனடாவில் இருக்கும் தமிழ்ப் பெற்றோர்களில் 75 விழுக்காட்டுப் பெற்றோர்கள் இலங்கையில் இருந்து கனடாவிற்கு வந்தவர்கள். எங்கள் காலத்திலேயே வீட்டில் தமிழ் இல்லை என்றால் எதிர்காலத்தில் எப்படி தமிழ் வீட்டில் இருக்கும்?

'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்தமொழி எம் தமிழ் மொழி' என்ற பெருமைகளை எல்லாம் நாம் இழக்கத் தயாராகி விட்டோமா?

வீட்டினுள் தமிழை முழுiயாக கொண்டு வருவதற்குச் சில வழிமுறைகளைப் பார்ப்போம். தமிழ்க் கல்வியைச் சிறு வயது முதல் பிள்ளைகளுக்கு வழங்குதல், தமிழ்க் கதைகளைக் கூறி நீதிநெறிகளைக் கூறுவது, தமிழ் நூல்களை வாசிக்க வைத்தல், தமிழ் பாடல்களை வீட்டில் ஒலிக்க விடுதல், தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்க வைத்தல், உறவுமுறைகளைத் தமிழில் அழைக்கப் பழக்குதல், தினமும் உண்ணும் காய்கறி, பழங்களின் பெயர்களை தமிழில் சொல்லிக் கொடுத்தல், குழந்தைகளிற்குத் தூய தமிழ்ப் பெயர்களை வைத்தல், தமிழில் நடக்கும் போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபெற வைத்தல், வீட்டில் உள்ள அனைவரும் தமிழில் மட்டுமே கதைக்க வேண்டும் என கட்டளை இடுதல், தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல அது எமது அடையாளம் என்பதைப் புரிய வைத்தல் போன்றன மூலம் தமிழை வீட்டினுள் கொண்டு வரலாம்.

'தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்' என்றார் கவிஞர் காசி ஆனந்தன். தமிழுக்கும் எமக்குமான உறவு தாய்க்கும் பிள்ளைக்குமான உறவாக இருக்கின்ற போது தமிழை வெறுப்பது உங்கள் தாயை வெறுப்பது போல் உள்ளது. தாய்மொழியைக் காப்பாற்ற முடியாமல் போனால் நாமும் தொலைந்துவிடுவோம்.

'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என எவ்வாறு நாம் வாழக் கூடாது என்றும் எமக்குக் கற்பித்த எமது தமிழ் மொழியை எமது எதிர்காலச் சந்ததிக்கு இல்லாமல் செய்துவிடாதீர்கள். ஒரு மனிதனின் மாற்றம் ஒரு குமுகத்தின் மாற்றத்திற்கு வித்திடும். ஒரு குமுகத்தின் மாற்றம் ஒரு இனத்தின் மாற்றத்திற்கு வித்திடும். எனவே தமிழை என்றென்றும் வாழ வைப்பது எம் ஒவ்வொருவருடைய கடமையாகும். அதற்கான முதற்படியாக வீட்டினுள் விருப்புடன் தமிழை அரியணை ஏற்றுவோம்.

ஆக்கம்: கேதீஸ்வரி இரஞ்சன்
ஆசிரியர், கனடாத் தமிழ்க் கல்லூரி

By கேதீஸ்வரி இரஞ்சன் 27 Mar, 2024

மிகத் தொன்மையான வரலாறு கொண்ட தமிழர் தங்கள் திறமைகளையும் நாகரிகத்தையும் கலைகள் மூலம் வெளிப்படுத்தினர். எம் முன்னோர்களின் பழமையான பொறியியல் அறிவுக்குச் சான்றாக அவர்களால் உருவாக்கப்பட்ட கட்டடங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், தூண்கள் ஆகியவை உள்ளன. அவை எமது பண்பாட்டையும் வரலாற்றையும் பறை சாற்றி நிற்கின்றன. உலக நாகரிகங்களில் இடம்பெறத்தக்க உயர்ந்த நாகரிகத்தை உடையவர்கள் தமிழர். அந்த வகையில் தமிழருடைய கட்டடக்கலை ஊடாகத் தமிழரின் வரலாறு, பொறியியல் நுட்பம் பற்றி நோக்குவோம்.

தொல்காப்பியம் வேந்தர்களின் அரண்மனையைச் சுற்றிலும் வலிமையான அரண்கள் இருந்ததை 'முழு முதல் அரணம்' எனக் குறிப்பிடுகிறது. பழந்தமிழர் வரலாறு பற்றிய ஆய்வில் சங்க இலக்கியங்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. சங்க இலக்கியங்களில் கோயில் என்னும் சொல் அரசனின் இல்லத்தைக் குறித்தது. சோழர் கோயில் (புறநானூறு 378) என்னும் புறநானூற்றுத் தொடர் மூலம் இதனை அறியலாம். செங்கற்கள் கொண்டு நெடுநிலைக் கோட்டங்கள் கட்டப்பட்டு இருந்தன. 'செங்கல்லை இட்டனர்' (அகநானூறு 167) 'இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தன' (அகநானூறு 167) என்ற அகநானூற்று வரிகள் மூலம் அறிய முடிகிறது.

செல்வ வளத்திற்கு ஏற்ப உயர்ந்த மாடங்கள் அமையப்பெற்ற இல்லங்களும் இருந்தன. முற்றம், திண்ணை, பெரிய வாசல்கள், மாடங்கள் என்பவற்றைக் கொண்ட பழந்தமிழர் வீடுகள் சங்க காலத்தில் இருந்தன.

'ஏழகத்தகரொடு உகரு முன்றில்

குறுந்தொடை நெடும் படிக்கால்

கொடுந் திண்ணை பஃறகைப்பின்

புழைவாயிற் போகிடைகழி

மழை நோயும் உயர் மட்டம்'

என்னும் பட்டினப்பாலை (141-145) பாடல் மூலம் அறிய முடிகிறது. சில்லென்று காற்று உள்ளே வருமாறு தமிழர் இல்லங்களை அமைத்தனர் என்பதை 'சில் காற்று இசைக்கும் பல்புழை நல் இல்' (மதுரைக்காஞ்சி 308) என்ற பாடல் மூலம் அறிய முடிகிறது.               பழந்தமிழர் கட்டடக் கலைக்குச் சான்றாகத் திகழ்வது கடலில் மூழ்கிப்போன பூம்புகார் பட்டினம். சிலப்பதிகாரம் மூலம் பூம்புகாரின் நகர அமைப்பையம் தமிழர் மதிநுட்பத்தையும் அறிய முடியும்.

'தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்' 1990களில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் ஆய்வினை நடத்தியது. இந்த ஆய்வின் போது பூம்புகார் கடற்பகுதியிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. நீரில் சுமார் 25 அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85 அடி நீளமும் 2 மீற்றர் உயரமும் கொண்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. இவற்றை வைத்துப் பார்க்கும் போது, பூம்புகாரில் ஒரு பெரிய தமிழர் நகரம் இருந்து அது கடலில் மூழ்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய பிரமாண்ட நகரம் தான் உலகில் முதல் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என இங்கிலாந்து ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்துள்ளார். 2001இல் பூம்புகார் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார்.

தமிழர் தோற்றமும் பரவலும் குறித்து ஆராய்ந்த இராமச்சந்திர தீட்சிதர் 'சிந்துவெளி, ஏலாமி, சுமேரியா, பாபிலோனியா, எகிப்து முதலிய பண்டைய நாகரிகங்களை உருவாக்கியவர்கள் தமிழர்களே' என்று குறித்துள்ளார். இன்றைய அகழ்வாய்வுகளும் பிற ஆய்வுகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன எனலாம்.

தமிழர்களின் பழமையான பொறியியல் நுட்பத்திற்குச் சான்றாய் முதல் இடத்தில் நிற்பது முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கல்லணை ஆகும். இது கரிகாற்சோழனால் கட்டப்பட்டது. கல்லணையானது 2000 ஆண்டுகள் பழமையும் நுட்பமான நீர் மேலாண்மையையும் ஒருசேர வெளிப்படுத்தும் சான்றாய் இன்றும் நிலைத்து நிற்கிறது. 1080 அடி நீளமும் 86 அடி அகலமும் 18 அடி உயரமும் கொண்டு இன்றும் உலகின் பழமையான நீர்த்தேக்கமாக விளங்குகிறது.

தமிழக கோவில்கள் என்பன வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல அவை எமது அடையாளங்கள் ஆகும். வரலாற்றின் தொன்மைமிக்க தேசிய இனமாகத் தமிழராகிய எம் இனத்தின் பெருமையை, முதுமையை, கட்டடக்கலையை, பழங்காலத்தில் தமிழர்கள் பெற்றிருந்த பல்துறைசார்ந்த அறிவினை வெளிப்படுத்தும் வரலாற்றுத் தடங்களாகும். பல்லவர் காலம் கட்டடக்கலையின் திருப்புமுனையாகும். குடவரைக் கோவில்கள், ஒற்றைக்கல் கோவில்கள் பல எழுந்தன. மண்டகப்பட்டு என்னும் இடத்தில் உள்ள இலக்சிதன் கோவிலே முதல் குடவரை கோயில் ஆகும். இது முதலாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்டது. குலசேகர பாண்டியனால் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பாண்டியரின் கட்டடக்கலைக்குச் சான்று ஆகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரங்கள் உயர்ந்த ஒத்த வடிவமான நான்கு கோபுரமும் அதில் உள்ள சிற்பங்களும் இன்றும் தமிழரின் பண்பாடு, வரலாறு என்பவற்றைப் பறைசாற்றி நிற்கிறது.

கட்டடக்கலையின் பொற்காலம் சோழர் காலம் ஆகும். உலகமே வியக்கும் தஞ்சைப் பெருவுடையார் கோவில் இராசராச சோழனால் கட்டப்பட்டது. தஞ்சைப் பெருங்கோவிலும், கங்கைகொண்ட சோழபுரம் சோழீசுவரர் கோவிலும், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலும் சோழர்களின் புகழை யுனெஸ்கோ வரை கொண்டு சென்றுள்ளது. தமிழர்கள் பெருமைக்கு இது ஓர் மைல்கல் ஆகும். சிதம்பர நடராசர் கோவில் தமிழரின் பெருமைக்கு மற்றொரு சான்று ஆகும். தமிழர்கள் உலகில் எங்கு சென்றாலும் தமது பண்பாட்டையும், மொழியையும் எடுத்துச் செல்வர். அந்த வகையில் கம்போடியாவில் அங்கோர்வாட் என்னும் இடத்தில் 2ஆம் சூரியவர்மனால் கட்டப்பட்ட கோவில் உலகின் மிகப் பெரிய கோவில்களில் ஒன்றாக, தமிழரின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றுகிறது. 163ஹெக்டேர் பரப்பளவில் மிகப்பெரும் கோவிலாக இது விளங்குகிறது.

ஆதிச்ச நல்லூர், கீழடி ஆகிய ஆய்வுகள் தமிழரின் வரலாற்றையும், பண்பாட்டையும் உலகிற்குப் பறைசாற்றி நிற்கிறது. எமது அடையாளங்களை அழிக்க முயலும் அந்நிய சக்திகள் மத்தியில் அழிக்க முடியாத வரலாற்றுச் சின்னங்களாக விளங்குபவை எமது கட்டிடக்கலையே என்றால் மிகையாகாது.

ஆக்கம்: கேதீஸ்வரி இரஞ்சன்

ஆசிரியர், கனடாத் தமிழ்க் கல்லூரி

By மஞ்சுளா சுதர்சன் 27 Mar, 2024

ஒரு வகுப்பறையில் கற்றல், கற்பித்தல் செயற்பாடு உயிரோட்டமாக நடைபெற்றால், அங்கு மகிழ்ச்சியான கற்றலும் கற்பித்தலும் இடம் பெற வாய்ப்பு உண்டு. முதலில் நாம் கற்றல் என்றால் என்ன? கற்பித்தல் என்றால் என்ன? கற்றல், கற்பித்தல் உயிரோட்டமாக நடைபெற என்ன செய்ய வேண்டும் என்று கண்டறிய வேண்டும்.

எமது வாழ்க்கையில் நீண்டு நிலைத்து நிற்கக் கூடிய ஒரு உறுதியான நடத்தை மாற்றம் கற்றல் ஆகும்;. ஒரு வகுப்பறையி;ல் ஆசிரியர் என்ன கற்பிக்கிறாரோ அது தான் கற்பித்தல் என்று நாம் கற்பித்தலுக்கு பொதுவான ஒரு விளக்கம் கூறலாம். ஒரு வகுப்பறையில் அதி திறன் கொண்ட மாணவர், சாதாரண மாணவர், மெல்லக் கற்கும் மாணவர் என பல தரப்பட்ட மாணவர் இருப்பர். ஆசிரியர் மாணவரின் கல்வித் தரத்தை இனங்கண்டு அதற்கேற்றக் கற்பித்தல் அணுகு முறைகளைப் பயன்படுத்த வேண்டும். வகுப்பிலுள்ள ஒவ்வொரு மாணவரதும் தனிப்பட்ட திறமைகளை அடையாளம் கண்டு வெளிக் கொண்டு வருவது ஒரு ஆசிரியரின் கடமையாகும். மாணவரின் தரத்தை அறிந்து ஆசிரியர் கற்பிக்கும் போது, அங்கு சிறந்த பயனுள்ள மகிழ்ச்சியான கற்றல், கற்பித்தலைக் காண முடியும்.

ஒரு வகுப்பில் கற்றல், கற்பித்தல் செயற்பாடு உயிரோட்டமாக அமைய வேண்டுமானால் அங்கு ஆசிரியர், மாணவரிடையே நல்;ல நட்பான உறவுமுறை இருக்க வேண்டும். ஆசிரியர், மாணவருக்குப் பிடித்த, எளிதான முறைகளைக் கையாண்டு கற்பிக்கும் போது, மாணவர் ஆசிரியரில் மதிப்பும், அன்பும் கொண்டு மகிழ்ச்சியாகக் கல்வி கற்பர். கற்பிக்கும் பாடத்திற்கு ஏற்ற நவீன தொழில்நுட்ப முறைகள், கருவிகளைப் பயன்படுத்திப் பாடத்தை உயிரோட்டமாகக் கற்பிக்கலாம். வகுப்பு நேரம் முழுவதும் விரிவுரை முறையில் கற்பிக்காமல் வகுப்பு நேரத்தைத் திட்டமிட்டு கற்றல் முறைகளை மாற்றி அமைத்துக் கற்பித்தால் மாணவர், தமது கவனத்தை சிதறவிடாது, களைப்பின்றி மகிழ்ச்சியோடு கற்க முடியும்.

நான்கு சுவர்களுக்குள் இருந்து பெறும் வகுப்பறைக் கல்வி மகிழ்வூட்ட வகுப்பறையின் உள் கட்டமைப்பும், கற்பிக்கப்படும் பாடங்களும், படிக்கும் புத்தகங்களும் மகிழ்வூட்டும் விதமாக அமைதல் வேண்டும்.

மகிழ்ச்சியான கற்றல், கற்பித்தலில் மாணவர் மையக் கல்வியும், சிறப்பிடம் பெறுகின்றது. அதாவது கண்டறி முறை, செயற்திட்ட முறை, கலந்துரையாடல் முறை, தீர்வு காணும் முறை எனப்பல முறைகளை பயன்படுத்தலாம். எடுத்துக் காட்டாக, ஆசிரியர் முழு வகுப்பையும் சிறு குழுக்களாகப் பிரித்துத் தலைப்பைக் கொடுக்கும் போது அவர்கள் தமது குழுவுடன் இணைந்து, கலந்துரையாடி, அதிலுள்ள சிக்கல்களுக்கான தீர்வைக் கண்டறிந்து அச் செயற்றிட்டத்தை எளிதாகச் செய்ய முடியும்.

அந்த வகையில், மாணவர் மையக் கல்வியின் முன்னோடியான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தத்துவவியலாளரான ரூஸோ, தனது எமில் எனும் நூலில், மாணவர்களுக்கு அனுபவங்கள் மூலம் கற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென வாதிட்டார். வெறுமனே ஞாபகப்படுத்தலை நோக்காகக் கொண்ட கற்பித்தல் முறையை எதிர்த்தார். சுவிட்சலாந்து நாட்டைச் சேர்ந்த உளவியலாளர் பெஸ்டலோசி, மாணவர்களுக்கு கல்வியை வழங்க முன்னர் அவர்களைப் பற்றிய ஆய்வை நடத்த வேண்டுமென்று கூறினார். அதாவது ஆசிரியர் தங்களது மாணவர்களின் ஆளுமைப் பல்வகைமை மற்றும் தனிப்பட்ட தேவைகள் பற்றியும் கவனம் செலுத்த வேண்டுமென்றார்.

மகிழ்ச்சியான கற்றல், கற்பித்தலில் பெற்றார், நண்பர், உறவினர், சக பணியாளர்கள், மேல் அதிகாரிகள் ஆகியோரின் பங்களிப்பும் முக்கிய இடம் பெறுகின்றது. நல்ல புரிந்துணர்வான, மகிழ்ச்சியான ஒரு குடும்பத்தில் இருந்து வரும் மாணவனால் மகிழ்ச்சியாகக் கல்வியைக் கற்றுச் சிறப்பான எதிர்காலத்தை அமைக்க முடியும். நல்ல புரிந்துணர்வான பள்ளியில் பணியாற்றும் ஆசிரியரால் மகிழ்ச்சியான கற்பித்தலில் ஈடுபட்டுச் சிறந்த எதிர்கால சமூகத்தை உருவாக்க முடியும்.

ஆசிரியர் பல்வேறு விதமான கற்பித்தல் உத்திகளைப் பயன்படுத்தி, எல்லா மாணவர்களின் தரத்தையும் உள் வாங்கி, மாணவருக்கு அப்பாடத்தில் மேலும் விருப்பத்தைத் தூண்டும் வகையில் மகிழ்ச்சியுடன் கற்பிக்க வேண்டும். மாணவரும் முழு ஈடுபாட்டுடன், மகிழ்ச்சியுடன் கல்வியைக் கற்க வேண்டும். எனவே மகிழக் கற்றல், மகிழக் கற்பித்தல் என்ற இலக்கில் ஆசிரியர், மாணவரின் பங்கு முதன்மையாக இருந்தாலும், புறச்சூழல்களும் சரியாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆக்கம்: மஞ்சுளா சுதர்சன்
ஆசிரியர், கனடாத் தமிழ்க் கல்லூரி

By இராகவன் சண்முகநாதன் 27 Mar, 2024

தமிழர் ஒரு தனி இனத்தவர். தமிழர் தொன்மையும் சிறப்பும் வாய்ந்தவர். உலகில் பல மொழிகள் தோன்றி வழங்கி மறைந்து ஒழிந்தன. ஒரு சில மொழிகள் மட்டும் கால வெள்ளத்;தில் அழியாமல் நிலைத்து நிற்கின்றன. அவ்வாறு நிலைத்துள்ள மொழிகளிலும் சில பேச்சு வழக்கு இழந்து இலக்கியமாகவே நிற்கின்றன. அவற்றின் இடத்தில் வேறு சில பல புதிய மொழிகள் தோன்றி வாழ்ந்து வருகின்றன. இவ்வாறு தோன்றி வளர்ந்து அழிந்த மொழிகளுக்கு இடையே மிகப் பழங்காலத்திலேயே தோன்றி செல்வாக்குடன் வளர்ந்து இன்றளவும் வாழ்ந்து வரும் மொழிகளில் தமிழ் முதன்மை அடைகின்றது. பழமைக்குப் பழமையாய் இலக்கிய வளம் உடையதாய் நிற்பதோடு புதுமைக்குப் புதுமையாய் கருத்துச் செல்வம் நிறைந்ததாய் என்றும் இளமைப் பொலிவுடன் விளங்குவது தமிழ் மொழியாகும். தமிழ் மொழியும் தமிழரும் பெருமைமிக்க மிகப் பழைய வரலாறு உடையவர்கள்.

தமிழினத்தின் தொன்மையும் சிறப்பும் தமிழ்ப் பழந்தமிழ் இலக்கியங்கள் என்று போற்றப்படும் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதிணெண் கீழ்கணக்கு, திருக்குறள் இரட்டைக் காப்பியங்கள் ஆகிய நூல்களும் அயல் நாட்டிலிருந்து கடல் வழியாகவோ நில வழியாகவோ வந்து சென்ற பிறநாட்டவர் குறிப்புக்களும் தமிழின மரபின் தொன்மையையும் சிறப்பையும் நன்கு தெளிவாக்கியுள்ளன.

லெமூரியா என்று கூறப்படும் அந்த நிலப்பரப்பே குமரிக் கண்டம் என்று தமிழிலக்கியத்தால் அறியப்படும் பகுதியாகும். அங்கு குமரிமலை என்ற பெருமலை இருந்தது என்றும் பஃறுளியாறு என்ற ஆறு ஓடியது என்றும் பழந்தமிழ் இலக்கியச் சான்றுகள் அறிவிக்கின்றன. இந்தக் குமரிக் கண்டத்தில்தான் தமிழ் மக்கள் தோன்றினர் என்றும் அவர்கள் பேசிய மொழியே ஆதித்தமிழ் மொழி என்றும் ஆய்வாளர்கள் பலர் சுட்டிக் காட்டியுள்ளனர். குமரிக்கண்டம் அழிவெய்தியபின் தென்னிந்தியாவின் தொடர்ச்சியாக இலங்கை, சுமத்திரா, யாவா முதிலிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு பெரும் தீவு உருவாகியது.

சங்க இலக்கியங்களில் தமிழர் நிலப் பகுதிகளின் எல்லைகள் கூறப்பட்டுள்ளன. குமரிக்கண்டத்திற்குத் தெற்கே 49 நாடுகள் இருந்தாகவும் அவை ஏழ் தெங்க நாடு, ஏழ் மதுரை நாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் பின்பாலை நாடு, ஏழ்குன்ற நாடு, ஏழ் குணகாண நாடு, ஏழ் குறும்பனை நாடு என்பவற்றைக் குறிக்கின்றன. தமிழர் வாழ்க்கை முறை செம்மைப்பட்ட திருந்திய ஒன்றாக அமைந்திருக்கின்றது. அரசியல் வாழ்வும், சமய வாழ்வும், இல்வாழ்க்கை முறையும் இவர்களிடத்தில் சிறந்த முறையில் அமைந்திருக்கின்றன.

'ஆதிசிவன் பெற்றான் - அகத்தியன் எனை வளர்த்தான்' என்று தமிழ்த்தாய் கூற்றாக் கூறும் பாரதியும் தமிழின் பிறப்பினை தென்னாட்டவன் சிவனுடன் தொடர்புபடுத்திக் கூறுவது தமிழ் மொழியின் தொன்மைத் தன்மையைக் குறிப்பதற்கேயாகும். தமிழர் என்ற இனத்தின் இன்றைய நிலையில் தனித்தே இலக்கியங்களை மட்டுமே வைத்துக்கொண்டு தமிழ் மிகத் தொன்மையான மொழி என்று நிறுவிவிடல் இயலாததாகவுள்ளது.

இன்றளவில் நடைபெறும் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் கீழடி, மணலூர். கொந்தகை, கொடுமணல், ஆதிச்சநல்லூர், சிவகளை போன்ற அகழ்வாராய்ச்சிகளில் கண்டறியப்படும் வாழ்விடங்கள், ஈமக்காடுகள், தொழிற்கூடங்களில் கண்டறியப்பட்டுள்ள க, ய என்ற தமிழி (தமிழ்) எழுத்துகள், செவ்வண்ணப் பூச்சுப் பெற்ற மட்பாண்ட ஓடுகள், மேலும் சூது பவளம், மணிகள், சுடுமண்ணால் ஆன முத்திரை, எடைக் கற்கள், வெண்கலம் கலந்த செங்கல் கட்டுமானங்கள், நுண்கற்காலத்தைச் சேர்ந்த மெல் அலகுக் கத்திகள், வழவழப்பான கல் மழுக்கள், சிறு கோடுகள் மற்றும் புள்ளிகளுடன் கூடிய தங்க நாணயங்கள், சீன மட்பாண்டத்தின் விளிம்புப் பகுதிகளுடன் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள், மேற்கூரை ஓடுகள், கிண்ணங்கள், தூத்துக்குடி மாவட்ட சிவகளையில் காசுகள், கற்பந்துகள், சுடுமணல் ஓடுகள் மற்றும் கற்களால் ஆன ஆயுதங்கள் கிடைத்து உள்ளன. இவ்வாறான தொடர் ஆய்வுகள் தமிழரின் தொன்மையையும் தமிழர் வரலாற்றையும் 3 இலட்சத்து 75 ஆயிரம் ஆண்டுகளுக்கும் கூடுதலாக இருக்கும் என ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். இத்தகைய ஆய்வுகள், கல்வெட்டுகள் பழம்பெரும் வரலாறுகள் தமிழரின் தொன்மையும் மொழியின் தோற்றமும் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதாகவே விளங்குகின்றன.

தமிழ் மொழி இலக்கியங்களாலும் ஆய்வுகளாலும் தொன்மையானதாகக் காணப்பட்டாலும் தமிழர் ஒரு நாட்டினராக இந்த நூற்றாண்டில் ஒரு நாட்டில் வாழாத காரணத்தினால், தமிழர் தமது மொழி, கலை, பண்பாடு, விழுமியங்கள் போன்றவற்றில் அகச்சூழலிலும் சரி புறச்சூழலிலும் தடுமாற்றத்துடன் நிலைமாறி வாழ்கின்ற தன்மையே தமிழின் தொன்மையை போற்றிப் பேணுதலில் பின்னடைவாக இருக்கின்றது.

பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தனது கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி மொழியாகும். அவன் வாழ்ந்ததும் வாழப்போவதும் மொழியாலேதான். மனித வரலாற்றின் தொடக்க காலத்திலிருந்தே மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு தெரிவிக்க வேண்டிய உணர்வோடு முயன்றுவந்த முயற்சியின் முற்றிய வளர்ச்சியே இன்றைய மொழியாகும்.

இன்றைய காலத்தில் இந்தப் பூமிப்பந்தில் பலநாடுகளில் வாழும் தமிழர் தாம் வாழும் நாடுகளில் பேசும் மொழியை மற்றொரு மொழியினத்தவருடன் தொடர்புகொள்ளும் போது, ஓர் மொழியிலுள்ள சொற்கள் மற்றொரு மொழியில் கலத்தல் இயல்பாகும். மொழிக்கலப்பு என்பது மொழி வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். சங்க காலத்திலிருந்தே தமிழுக்கும் வடமொழிக்கும் இருந்த தொடர்பை தொல்காப்பியம் மூலம் அறிகிறோம். சங்கமருவிய காலத்தில் சமண சமயச் செல்வாக்கினால் பிராகிருத மொழித் தொடர்பு ஏற்பட்டது. ஆழ்வார், நாயன்மார் காலத்திலும் வட மொழிச் செல்வாக்கு மிகுந்துவிட்டது. பின்னர் ஏற்பட்ட மாலிக்காபூர், பெர்சியன் படையெடுப்புக்குப்பின் உருது மொழியின் வாயிலாக அரபுச் சொற்கள் தமிழில் புகுந்துவிட்டன. இதன் பின் விஜயநகர நாயக்கர்கள் தமிழகத்தின் ஒரு பகுதியை ஆளத் தொடங்கிய பொழுது தெலுங்குச் சொற்கள் தமிழில் புகுந்தன. இதன் பின்னர் மேலைநாட்டாரின் வரவால் போர்ச்சுக்கீஸ், டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலச் சொற்கள் தமிழில் கலக்கத் தொடங்கின.

தமிழில் பிறமொழிச் சொற்கள் கலக்கும் போது பல விளைவுகள் ஏற்படுகின்றன. இந்த வகையிலே தமிழ் செந்தமிழ், கொடுந்தமிழ் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. செந்தமிழ் என்பது செம்மைப்பட்ட அல்லது திருத்தமுற்ற தமிழாகும். இது தமிழின் பழமையான வடிவங்களை அழியாமல் பாதுகாத்து வருவது. கொடுந்தமிழ் என்பது பேச்சுத் தமிழாகும்.

சங்க இலக்கியங்களில் இடம்பெறும் செந்தமிழ் நடையின் தூய்மையை நோக்கும்போது அது இன்றைய மக்களுக்கு விளங்காத கடுமையை நோக்குகின்றது. இதனைத் தொல்காப்பியர் செந்தமிழ் நிலத்து எல்லையையோ கொடுந்தமிழ் நிலத்து எல்லையையோ குறிப்பிடவில்லை. செந்தமிழை இயற்சொல்லாகக் கொண்டு, வட்டார வழக்கினைத் திசைச்சொல் என்கின்றார். இந்த கொடுந்தமிழ் எனப்படும் பேச்சுத்தமிழ் பல நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தாம் வாழும் நாடுகளில் அரசியல், சமயம், வாணிகம், கலை, பண்பாட்டுத் தேவைக்காகப் பிறமொழி பேசும் இனத்தவருடன் தொடர்பு கொள்ளும்போது, பிற மொழிச் சொற்களை தாங்கள் அறியாதவாறே உள்வாங்கிக் கொண்டு தொடர்ந்து பேச்சு வழக்கில் கையாளுகின்றார்கள். இதற்குக்காரணம் அரசியல் செல்வாக்குகளும், ஆட்சிமொழியாகவும், அரசுமொழியாகவும் மொழிகள் ஆதிக்கம் செலுத்தத் தவறுவதால் ஆகும்.

இருபதாம் நூற்றாண்டில் தமிழர் யார்? தமிழர் பண்பாடு எது? தமிழனின் அடையாளம் என்ன? போன்ற கேள்விகள் இன்று பலரால் எழுப்பப்பட்டுள்ளன. தமிழர் பண்பாட்டு அடையாளங்கள் சிதைக்கப்பட்டு வருவதால் இந்தக் கேள்விகள் மேலோங்கி நிற்கின்றன. பண்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட மக்களின் பண்பாடாகும். தமிழ்ப்பண்பாடு என்பது தமிழ் மக்களின் பண்பாட்டைக் குறிக்கும். ஆனால் தமிழ் மொழி பேசுபவர்கள் கூட பல்வேறு குழுக்களாகவும், மொழி வேறுபாடு உடையவர்களாகவும் இருக்கிறார்கள். இத்தகைய வேறுபாடுகளை மறைக்கப்படுவதன் அரசியலைக் கண்டு பிடிப்பது அவசியமாகின்றது.

உரிமை உள்ளவன் தனியரசு என்பது உலக வரலாறு என்பர். நிலவியல் எல்லை என்பது அதிகாரம் சார்ந்த ஒன்று. நிலவியல் எல்லையும் பண்பாட்டு எல்லையும் ஒன்று அல்ல. பண்பாட்டு எல்லை என்பது குறிப்பிட்ட பண்பாட்டு மரபுகளைப் பின்பற்றும் குழு பரவி வாழும் நிலவியல் பகுதியைக் குறிப்பதாகும். ஆனால் நிலவியல் எல்லை என்பது இயற்கை எல்லைகளால் அல்லது அரசியல் அதிகார வரம்புகளால் தீர்மானிக்கப்படுவதாகும். இந்த நிலவியல் எல்லைகளைக் கொண்டு குழுக்களை வரையறை செய்ய முடியாது. ஏனெனில் குழுக்களின் பரவல் என்பது அரசியல் அதிகார நிலவியல் எல்லைகளுக்குள் உட்பட்டதன்று. அந்தவகையில் பண்பாட்டு நிலவியல் எல்லைகளின் தொன்மை நோக்கிப் பார்க்கின்ற போது தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் கூறும் செய்திகளை தேடிப்பார்ப்போம்.

பழந்தமிழ் இலக்கியங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐவகையான நிலங்களைக் குறிப்பிடுகின்றன. இவ்வகையான நிலப்பகுதிகளும் ஒருவகையான பண்பாட்டு நிலைக் கூறுகள் ஆகும். ஏனெனில் ஒவ்வொரு நிலத்திற்குமுரிய முதல்பொருள் (நிலம், பொழுது), கருப்பொருள் (தெய்வம், உணவு, விலங்குகள், மரம் செடி, கொடிகள், பறவை, தோற்கருவிகள், தொழில், யாழ் போன்ற நரம்புக்கருவிகள்), உரிப்பொருள் (புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல், இவற்றின் சூழலும்) ஆகியன வரையறுக்கப்பட்டவை. இதில் முதல், உரி, கருப்பொருட்கள் பண்பாடு சார்ந்தவை. இவ் ஐந்திணைகளும் மனித வளர்ச்சிகளைக் குறிப்பனவாகவும் பண்பாட்டு நிலைகளை எடுத்துக் கூறுவதாகவும் தமிழ் இலக்கிய மரபில் இலக்கண வகைமைகளாக அமைவதையும் காணலாம். இவை தமிழர் மரபு பற்றி விளக்கி நிற்பவை.

இந்தவகையில் தமிழர் அரசியல் சார்ந்த நிலங்கள் எல்லைகள் நிரந்தரமானதாக இருந்ததில்லை. பேரரசர்கள், சிற்றரசர்கள், குறுநில மன்னர்கள், மண்மீட்பு விடுதலை இயக்கங்கள் போன்றோரின் படைகள் அரசியல் சார்ந்த நிலவியல் எல்லைகளை மாற்றிக்கொண்டே இருந்தன. தொன்மைக்காலப் பழந்தமிழ் இலக்கியங்கள் கூறும் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நீண்;ட கால ஆட்சியில் இருந்தாலும் நிலப்பரப்புகள் நிரந்தரமானதாக இருந்தில்லை. பழந்தமிழகம் ஐந்து நாடுகளாக இருந்தாக வரலாற்று ஆசிரியர் கூறுகின்றனர். இவை சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு போன்றனவாகும். இந்த நாடுகளின் நிலவியல் எல்லை என்பது இன்றைய தமிழகம், கேரளம், மற்றும் ஆந்திரா, கருநாடகத்தின் சிலபகுதிகள் ஆகும். இதன் பின்னர் வந்த ஆங்கிலேயர் காலத்தில் பல்வேறு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. இந்திய விடுதலைக்குப்பின் மொழி அடிப்படையிலான மாநில நிலவியல் எல்லைப் பகுப்பு அமைக்கப்பட்டது. இந்த நிலவியல் எல்லைகள் தெளிவாகவும் துல்லியமாகவும் வரையறுப்பு செய்யப்படவில்லை. குறிப்பாக இருமொழி பேசும் குழுக்களை ஒரு எல்லைக்குள் எவ்வாறு அடக்குவது என்ற குழப்பம் நிலவியது. இவ்வாறன குமுகாயச் சூழலில் குழுக்களின் நிலவியல் எல்லைகளை வரையறுப்பது கடினம். இதன் விளைவாக இன்றைய தலைமுறை மொழி, இனம் என்று பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றது.

தொன்மை என்பது வரலாறு. தேடல் என்பது உணர்வு. பேணல் என்பது கடமை. நான் யார்? நாம் யார்? என்ற தேடல் தனிமனிதனையோ அல்லது குமுகாயத்தையோ தன் வரலாற்றின்பால் தொன்மையைத் தேடிச்செல்ல வைக்கின்றது. இன்றைய குமுகாயச் சிந்தனை உலகில் இப்படியான பல வினாக்கள் எழுப்பப்படுகின்றன. வரலாறு என்பது கால ஓட்டத்தைக் குறிப்பது அல்ல. காலத்தின் கோலத்தைக் கணிப்பிட்டுக் கூறுவதுமில்லை. இறந்தகாலத்தைப் புதைகுழிக்குள் தேடுவதுமில்லை. கடந்து போன நிகழ்வுகளை காலவரிசையில் நிரைப்படுத்துவதுமில்லை. வரலாறு என்பது மனிதனின் வாழ்வு பற்றியது.

மனித வரலாற்றை மனிதர்கள் படைப்பதில்லை. இந்த வரலாற்றில் மனிதனின் தொடர் செயற்பாட்டின் மூலமே உறவுகளிலும் உலகத்திலும் மாற்றம் நிகழ்கின்றது. உலகில் இருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான இனங்களில் ஒவ்வொரு இனங்களும் ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை வாய்ந்ததாகத்தான் இருக்கின்றது. இப்படியான தன்மை வாய்ந்த தமிழினமும் தமது தொன்மை வரலாறு அறிந்து எதிர்கால வரலாற்றை சரியான பாதையில் தமது அடையாளங்களை தெளிவான பாதையில் ஒருங்கிணைத்து எடுத்துச் செல்லுதல் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமாக அமைகின்றது.

உலகில் நாடு இன்றி இருக்கும் இனங்களில் தமிழ் இனமும் ஒன்று. இவர்கள் அமைப்புகள் ஊடாக மனித செயப்பாடுகளை அரசியல், கருத்தியல், பொருண்மியம் ஊடாக எதிர்காலத்தின் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது காலம் கையளித்த கடமையாக அமைகின்றது.

உலகில் தவறுதாலாகப் புரிந்து கொள்ளப்பட்ட வரலாறுகளில் தமிழர் வரலாறும் ஒன்றாகிவிட்டது. வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடங்கி இன்று வரையிலும் உள்ள உலகில் வாழ்கின்ற தமிழர் வரலாற்றினை தக்க சான்றுகளுடன் தொகுத்துத் தொடர்புபடுத்திப் பார்ப்பது நன்று. தாய்த்தமிழ் மண்ணில் வாழ இயலாது கடல் கடந்து சென்று வாழும் மண்ணில் வாழுகின்ற தமிழினம் தமது ஆதிக்குடிகள் பற்றிய வரலாற்று பதிவுகளை கண்டறிந்து எதிர் கால தலைமுறைக்கு எடுத்துரைத்துச் செல்வது முக்கியமாகின்றது. தமது மக்களின் வரலாற்றை, உண்மைத் தன்மையை உறுதியோடும் கடமை உணர்வோடும் எடுத்துரைக்க வேண்டும்.

உலகத்தின் கவனம் தமிழினத்தின் போரட்டத்தின் பக்கம் திரும்பியிருக்கும் இந்த வேளையில் தமிழர் தங்கள் உரிமைகளையும் தொன்மை வரலாற்றுச் சான்றுகளையும், முற்றிலும் தவறுதலான புரிதலுடன் உள்ள ஏனைய நாட்டவருக்கும் எடுத்துரைக்கவேண்டும். பல தமிழருக்கே தமது வரலாற்றுப் பின்னணிகளைத் தெளிவு படுத்தவேண்டிய தன்மையும் உண்டு. தமிழர் தமிழார்வம் கொண்டு இனப்பற்றுடன் செயற்பட வேண்டிய கடமைப்பாடு உள்ளது.

குமரிக்கண்டம் தொடக்கம் தமிழீழம் வரை தமிழர் வரலாறு நீண்டு செல்கின்றது. இன்று தமிழன் உலகின் அனைத்து நாடுகளிலும் பரந்து விரிந்து வாழ்கின்றான். தமிழனின் மண் பிற இனத்தவனின் கையில் இருப்பதுதான் இதற்குக் காரணமாக அமைகின்றது. தாய் நாட்டில் தன்மானத்துடன் வாழ வழியின்றி இருக்கும் சூழலில், பிற நாடுகளில் வாழ்கின்ற தமிழர் ஒவ்வொருவரும் தமக்கென்ற ஒரு தாய் நாட்டை உருவாக்க வீரத்துடனும் ஓர்மத்துடனும் போராடவேண்டும். புறநானூற்றில் தமிழரின் வீரத்தை நாம் அனைவரும் படித்ததுண்டு, ஆனால் யாரும் பார்த்தது இல்லை. ஆனால் அந்த தமிழரின் வீரம் நம் கண்முன்னால் உலகம் முழுவதும் பறைசாற்றப்பட்டது இந்த நூற்றாண்டில்தான் என்பது வரலாற்று உண்மை.

'சுதந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்தடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்து போக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காப் போராடுவதைத்தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை' என்கின்ற தலைவனின் சிந்தனையை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். வரலாறு கையளித்த கடமை என்பது வரலாற்றின் தொன்மையை அறிந்து உணர்வின் தேடல் ஊடாக எமது தமிழ் இனத்தின் அடையாளத்தை தக்க வைத்துத் தனியரசு உருவாக்கப்படவேண்டும். நாடு என்பது அனைத்துக்கும் அரண். அரண் இருப்பின் அனைத்தும் காக்கப்படும்.

இருப்பாய் தமிழா நெருப்பாய்!

இருந்தது போதும் அடுத்தவன் காலுக்குச் செருப்பாய்!

ஆக்கம்: இராகவன் சண்முகநாதன்
ஆசிரியர், கனடாத் தமிழ்க் கல்லூரி

By இராகவன் சண்முகநாதன் 27 Mar, 2024

'நிலமிழந்து போனால் பலமிழந்து போகும்! பலமிழந்து போனால் இனம் அழிந்து போகும்'

தமிழீழத்துக் கவி புதுவையின் வரிகள் இந்தத் தலைப்பினை மேலும் பலமாக எழுதுவதற்குத் தொடங்கி வைக்கின்றது. தமிழர் வரலாற்றில் நிலம் கொண்டிருக்கையில் தமிழர் பலமாக வாழ்ந்தார்கள் என்பதனை தமிழ் இலக்கியங்கள் காட்டி நிற்கின்றன. தமிழ் இலக்கியங்களில் வரலாற்று அடிப்படையில் லெமுரியா என்று கூறப்படும் அந்த நிலப்பரப்பே குமரிக் கண்டம் என்று அறியப்பட்டது. அங்கு குமரிமலை என்ற பெருமலை இருந்தது என்றும் பஃறுளியாறு என்ற ஆறு ஓடியது என்றும் பழந்தமிழ் இலக்கியச் சான்றுகள் அறிவிக்கின்றன. இந்தக் குமரிக் கண்டத்தில்தான் தமிழ் மக்கள் தோன்றினர் என்றும் அவர்கள் பேசிய மொழியே ஆதித்தமிழ் மொழி என்றும் ஆய்வாளர்; பலர் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்தச் செய்தியினை சிலப்பதிகார அடிகளால் அறிகின்றோம்.

வடிவேல் எறிந்த வான்பகை பொறாது

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்

குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு

தென்றிசை யாண்ட தென்னவன் வாழி !                           - சிலம்பு .11:18-22

குமரிக்கண்டம் அழிவெய்தியபின் தென்னிந்தியாவின் தொடர்ச்சியாக இலங்கை, சுமத்திரா, யாவா முதிலிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு பெருந்தீவு உருவாகியது. இவ்வாறு நிலப்பரப்பில் வாழ்ந்த தமிழர் தமது நிலப்பரப்புகளை ஐந்திணையாக வகுத்துள்ளனர். நிலம் என்பது வெறும் வாழும் இடமோ அல்லது ஆளும் இடமோ அல்ல. மனித வாழ்வியலில் தான் கொண்ட வரலாற்றினையும் வாழ்வியற் பண்பாடுகளையும் சுமந்து நிற்கும் பலம் கொண்ட பண்பாட்டுப் பெட்டகம்.

உரிமை உள்ளவன் தனியரசு என்பது உலக வரலாறு. நிலவியல் எல்லை என்பது அதிகாரம் சார்ந்த ஒன்று. நிலவியல் எல்லையும் பண்பாட்டு எல்லையும் ஒன்று அல்ல. பண்பாட்டு எல்லை என்பது குறிப்பிட்ட பண்பாட்டு மரபுகளைப் பின்பற்றும் குழு பரவி வாழும் நிலவியல் பகுதியைக் குறிப்பதாகும். ஆனால் நிலவியல் எல்லை என்பது இயற்கை எல்லைகளால் அல்லது அரசியல் அதிகார வரம்புகளால் தீர்மானிக்கப்படுவதாகும். இந்த நிலவியல் எல்லைகளைக் கொண்டு குழுக்களை வரையறை செய்ய முடியாது. ஏனெனில் குழுக்களில் பரவல் அரசியல் அதிகார நிலவியல் எல்லைகளுக்குள் உட்பட்டதன்று. அந்த வகையில் பண்பாட்டு நிலவியல் எல்லைகளைத் தொன்மை நோக்கிப் பார்க்கின்ற பொழுது தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் கூறும் செய்திகளை தேடிப்பார்ப்போம்.

பழந்தமிழ் இலக்கியங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐவகையான நிலங்களைக் குறிப்பிடுகின்றன. மலையும் மலையைச் சார்ந்த இடம் குறிஞ்சி, காடும் காட்டைச் சார்ந்த இடம் முல்லை, வயலும் வயல் சார்ந்த இடம் மருதம், கடலும் கடலைச் சார்ந்த இடம் நெய்தல், வறண்ட நிலம் பாலை என்று நிலம் வரையறை செய்யப்பட்டுள்ளது. இவ்வகையான நிலப்பகுதிகளும் ஒரு வகையான பண்பாட்டு நிலைக் கூறுகள் ஆகும். ஏனெனில் ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய முதற்பொருள் (நிலம், பொழுது), கருப்பொருள் (தெய்வம், உணவு, விலங்குகள், மரம் செடி, கொடிகள், பறவை, தோற்கருவிகள், தொழில், யாழ் போன்ற நரம்புக்கருவிகள்), உரிப்பொருள் (புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல், இவற்றின் சூழலும்) ஆகியன வரையறுக்கப்பட்டவை. இதில் முதல், உரி, கருப்பொருட்கள் பண்பாடு சார்ந்தவை. இவ் ஐந்திணைகளும் மனித வளர்ச்சிகளைக் குறிப்பனவாகவும், பண்பாட்டு நிலைகளை எடுத்துக் கூறுவதாகவும் தமிழ் இலக்கிய மரபில் இலக்கண வகைமைகளாக அமைவதையும் காணலாம். இவை தமிழர் மரபு பற்றி விளக்கி நிற்பவை.

வன்பகை நடுங்க வேலெடுத்து பாய்ந்து தாய் நிலம் காத்த முப்பாட்டன் முருகன் தமிழரருக்குத் தெய்வம் ஆனான். ஓடும்

நீரினை தேக்கி நிலத்தில் வேளாண்மை கண்டு விளைச்சல் செய்ய முடியும் எனக் காட்டினான் பாட்டன் கரிகால் பெருவளத்தான். அழகு நிறை சிற்பங்களைக் கொண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வான்புகழ் கொண்டு தஞ்சைப் பெருவுடையார் கொண்டான் அருண்மொழிச் சோழன். இவையெல்லாம் தமிழன் நிலம் கொண்டு பலம் கொண்டு வாழ்ந்தமையினால் பொற்காலமாக தமிழர் வரலாறு அமைந்தது.

இந்த வகையில் காலப்போக்கில் தமிழர் அரசியல் சார்ந்த நிலங்கள் எல்லைகள் நிரந்தரமானதாக இருந்ததில்லை. பேரரசர், சிற்றரசர், குறுநில மன்னர், மண்மீட்பு விடுதலை இயக்கங்கள் போன்றோரின் படைகள், அரசியல் சார்ந்த நிலவியல் எல்லைகளை மாற்றிக்கொண்டே இருந்தன. தொன்மைக்கால பழந்தமிழ் இலக்கியங்கள் கூறும் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நீண்;ட கால ஆட்சியில் இருந்தாலும் நிலப்பரப்புகள் நிரந்தரமானதாக இருந்தில்லை. பழந்தமிழகம் ஐந்து நாடுகளாக இருந்தாக வரலாற்று ஆசிரியர் கூறுகின்றனர். அவை சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு என்பனவாகும். இந்த நாடுகளின் நிலவியல் எல்லை என்பது இன்றைய தமிழகம், கேரளம், மற்றும் ஆந்திரா, கர்நாடகத்தின் சிலபகுதிகள் ஆகும்.

இதன் பின்னர் வந்த ஆங்கிலேயர் காலத்தில் பல்வேறு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பின் மொழி அடிப்படையிலான மாநில நிலவியல் எல்லைப் பகுப்பு அமைக்கப்பட்டது. இவை தெளிவாகவும் துல்லியமாகவும் நிலவியல் எல்லைகள் வரையறை செய்யப்படவில்லை. குறிப்பாக, இரு மொழி பேசும் குழுக்களை ஒரு எல்லைக்குள் எவ்வாறு அடக்குவது என்ற குழப்பம் நிலவியது. இவ்வாறான குமுகாயச் சூழலில், குழுக்களின் நிலவியல் எல்லைகளை வரையறுப்பது கடினம். இதன் விளைவாக அரசியல் நிலவியல் பண்பாட்டு மாற்றங்களை இன்றைய தலைமுறை மொழி, இனம் என்று பல சிக்கல்களை எதிர் நோக்குகின்றது. இடையிடையே ஏற்பட்ட அரசு மாற்றம், ஆட்சி மாற்றம், நிலமாற்றம் முதலியன தமிழர் பலத்தைப் பாதித்தது. மேலும் நாம் அண்மைக் காலங்களாக தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் நடைபெறும் வரலாற்றுச் சான்றுகளை கண்முன்னே பார்க்கின்றோம்.

ஈழத்திலும் தமிழர் நிலப்பகுதிகள் குடியேற்றங்கள், இனப்படுகொலைகள் ஊடாகப் பறிக்கப்படுகின்றன. தன்மானத்தோடு, தன்னுரிமையோடு வாழ, தமிழருக்கென தனிநாடு ஈழம் வேண்டி நடந்த போர் இன்று மௌனிக்கப்பட்டுள்ளது. சொந்த மண் விடுதலைக்காகப் பல விடுதலை வீரர்கள் தமது உயிர்களை ஈகம் செய்தனர். பலம் கொண்டு வாழ்ந்த தமிழரை இலங்கையில் இருந்து போர், பொருண்மியம் முதலியன புலம் பெயர வைத்தன. நாட்டில் நிலமிழந்த காரணத்தினால்தான் அவர்கள் பலமங்கு பறிபோனது. நிலம் காக்கும் வீரர்கள் படை எம்மண்ணில் இருந்தபோது, புலத்தில் வாழும் தமிழர் தங்கள் பலத்தால் சொந்தநாட்டின் தேவைகளை பலமாக்கிக் கொண்டனர் என்பதை ஈழத்து வரலாறு காட்டி நிற்கின்றது. இன்றளவும் புலத்தில் உள்ளோர் தங்கள் நிலத்தின்மீது கொண்டுள்ள பற்றினால், தங்கள் சொந்தங்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்காக பலவகையில் பலம் சேர்க்கும் பங்காற்றல்களைச் செய்து வருகின்றனர்.

குமரிக்கண்டம் தொடக்கம் தமிழீழம் வரை தமிழர் வரலாறு நீண்டு செல்கின்றது. இன்று தமிழன் உலகின் அனைத்து நாடுகளிலும் பரந்து விரிந்து வாழ்கின்றான். தமிழனின் மண் பிற இனத்தவனின் கையில் இருப்பதுதான் இதற்குக் காரணமாக அமைகின்றது. சொந்த நாட்டில் மட்டுமின்றித் தாய் நாட்டிலும் தன்மானத்துடன் வாழவழியின்றிப் பிற மாநிலங்களில், நாடுகளில் வாழ்கின்ற தமிழர் ஒவ்வொருவரும் தமக்கென்ற ஒரு தாய் நாட்டை உருவாக்க வீரத்துடனும் போராடவேண்டும்.

புறநானூற்றில் தமிழரின் வீரத்தை நாம் அனைவரும் படித்ததுண்டு, ஆனால் யாரும் பார்த்தது இல்லை. ஆனால் அந்த தமிழரின் வீரம் நம் கண்முன்னால் உலகம் முழுவதும் பறை சாற்றப்பட்டது இந்த நூற்றாண்டில்தான் என்பது வரலாற்று உண்மை.

'சுதந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்தடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்து போக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை' என்கின்ற தலைவனின் சிந்தனையை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

வரலாறு கையளித்த கடமை என்பது வரலாற்றின் தொன்மையை அறிந்து எமது தமிழ் இனத்தின் அடையாளத்தை பலத்தினூடாக தக்க வைத்து தனியரசு உருவாக்கப்படவேண்டும். நாடு என்பது அனைத்துக்கும் அரண். அரண் இருப்பின் அனைத்தும் காக்கப்படும். மீண்டும் புதுவையின் கவிதையுடன் இதனை நிறைவு செய்து கொள்ளாலாம்.

'இழந்து போனவனுக்கு வாழ்க்கை துயரம்

எழுந்து நடப்பவனுக்கு எல்லாமே மதுரம்'

துயரம் அழுவதற்காக அல்ல....எழுவதற்காக....

' அட மானுடனே !

தாயகத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள்

பெற்ற தாய் சுமந்தது பத்து மாதம்

நிலம் சுமப்பதோ நீண்ட காலம் .

அன்னை மடியில் இருந்து கீழிறங்கி

அடுத்த அடியை நீ வைத்தது

தாயகத்தின் நெஞ்சில்தானே .

இறுதியில் புதைந்தோ

அல்லது எரிந்தோ எருவாவதும்

தாய்நிலத்தின் மடியில்தானே .

நிலமிழந்து போனால் பலமிழந்து போகும்

பலமிழந்து போனால் இனம் அழந்து போகும்

ஆதலால் மானுடனே !

தாய்நிலத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள் '

ஆக்கம்: இராகவன் சண்முகநாதன்
ஆசிரியர், கனடாத் தமிழ்க் கல்லூரி

By சுலோச்சனா லோகன் 27 Mar, 2024

  “பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து

சங்கத்து இருப்பிலே p ருந்து வைகையேட்டிலே தவழ்ந்த பேதை

நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்து

மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளரும்

செம் மொழியாம் தமிழ் மொழியைப்

பேசும் பெருமைக்குரியவர்கள் தமிழர்கள்”

தொன்மைக் காலத்தில் நாகரிக விளக்கேற்றி நானிலம் முழுவதும் அகவொளி பரப்பியவன் தமிழனே. மிகப்பழமை வாய்ந்த இனம் தமிழினமே. முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் சீரிளமைத் திறனும் குன்றாமல் இயன்றளவும் நின்று புதுமைப் பொலிவோடு திகழ்வது தமிழ் மொழியே. இத்தகைய தமிழ் பேசும் தமிழரின் தொன்மையை உலகிற்கு அறிவித்தவர் கால்டுவெல் பெருமகனார். தனித்தமிழிற்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர், செடியாகத் தழைக்கச் செய்தவர் நிறை தமிழ் மலையாம் மறைமலையடிகள்.

தமிழும் தமிழ்மொழிசார் இலக்கியங்களும் பழமை மிக்கவை மட்டுமன்றி உலகெங்கும் வாழும் பல்லின மக்களுக்கும் அறிவூட்டக்கூடிய கருவூலங்களாகத் திகழ்கின்றன. குறிப்பாக திருக்குறள், நாலடியார் எட்டுத்தொகை பத்துப்பாட்டு போன்ற பல இலக்கியங்கள் அன்றிலிருந்து இன்றுவரை மக்களின் உள்ளங்களை வளம்படுத்தக் கூடியனவாக அமைந்துள்ளன.

மூவேந்தர் ஆட்சி, அன்பின் ஐந்திணை ஒழுக்கம், போரியல் ஒழுக்கம் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை, உணவு முறை, தொழில், கொடைத்தன்மை என்பன யாவும் வளமானதாகவும் இயற்கையோடு ஒட்டியதாக இருந்ததுவும் மிகவும் சிறப்பான விடயம். இன்று மனிதர்களிடம் அதுவும் தமிழர்களிடம் காணப்படும் ஒற்றுமை, தன்மானம், வீரம், அன்பு, மனிதாபிமானம், மானிட உறவு எனப் பல்வேறு வாழ்வியல் அம்சங்கள் சங்கத் தமிழரிடை நிலை பெற்றிருந்தது.

சங்ககால சமுதாய அமைப்பானது இயற்கைக்கேற்ப குழுமுறை அமைப்புகளையும் அவற்றிற்கிடையிலான போட்டிகளையும், போர்களையும் நிறைவாகக் கொண்டிருந்தது. அச்சமுதாயக் குழுக்களின் தலைவர்களே மன்னர்களாக இருந்தனர். அவர்கள் ஒருபொழுதும் அறநெறி தவறிய வழியில் சென்றதில்லை. எப்பொழுதும் குடிமக்களுக்கு ஏற்பவே ஆட்சி செய்தனர். இச் செயற்பாடு முடியாட்சியிலும் மக்களின் தனிமனித உரிமை பேணப்பட்ட தன்மையை வெளிப்படுத்தியது. அதனால் மக்கள், மிக அவசியமான உணவு, நீரை விட மன்னனையே உயிராகப் போற்றினர் என்பதற்கு

 ‘நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்த்தலை உலகம்’

என்ற புறநானூற்றுப் பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன. மனிதவாழ்வு என்பது இயற்கையுடன் இணைந்திருக்கும் வரை மனிதனுக்கு எவ்வித இடர்பாடுகளும் ஏற்பட மாட்டாது என்பதனைச் சங்கத்தமிழர் வாழ்வு உணர்த்தி நிற்கின்றது. ஆனால் இன்று அதை மறந்து இயற்கையை அழித்து மனிதன் வாழத் தலைப்பட்டதன் விளைவு விபரீதமான ஆபத்துமிக்க நோய்கள், இயற்கை அனர்த்தங்கள், உலகத்தையே அச்சுறுத்தி நிற்கும் கொடிய கொரோனா நோய்கள் அதாவது இலட்சக்கணக்கான உயிர்களைக் கொன்று குவித்துத் தொடர்ந்தும் மக்களையே சுற்றிக் கொண்டிருக்கும் கொடிய நோயால் மனித சந்ததியே அழிந்து கொண்டிருக்கின்றது.

எனவே பழைய கால வாழ்க்கை முறை அக்காலத்து மன்னர்களின் பெருநீதி, குறிப்பாக மனுநீதி கண்ட சோழன் பசுக்கன்றிற்காகத் தன் மகனைக் கொல்ல நினைத்ததுவும், முல்லைக் கொடிக்காகப் பாரி தேரை நிறுத்தியதும், பேகன் மயிலுக்குப் போர்வை கொடுத்ததும் நாம் என்றும் நினைவில் வைக்க வேண்டியன ஆகும். இவை யாவும் தமிழருக்குரிய சிறப்பம்சம் என்பதை எவரும் மறக்க முடியாது.

மேலும் சங்ககால மக்கள் இயற்கையோடு இணைந்து மகிழ்வாக வாழ்ந்த வரலாற்றை ஒருமுறை மீட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டியது பெருமைக்குரிய தமிழர்கள் அனைவருக்கும் மிகமிக அவசியம். இயற்கையோடு இணைந்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நில அமைப்பிற்கேற்ப அவனது காதல் வாழ்வு, விருந்தோம்பல் அறஉணர்வு போரியல் நடைமுறை, தொழில், உணவுப் பழக்கவழக்கங்கள் என்பன அமைந்திருந்தமை எடுத்துக் காட்டாகின்றது.

குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்தோர் குறவர்கள், முல்லை நிலத்தில் வாழ்ந்தோர் ஆயர்கள், மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவர்கள், நெய்தல் நிலத்தில் வாழ்ந்தோர் பரதவர்கள், பாலை நிலத்தில் வாழ்ந்தோர் மறவர்கள் எனவும் அழைக்கப்பட்டனர். வேட்டையாடுதல், தினைவிதைத்தல், தேன் சேகரித்தல் போன்ற தொழில்களைக் குறிஞ்சி நிலத்தோர் மேற்கொள்ள, முல்லை நிலத்தோர் காடுகளில் வாழ்ந்தபோதும் காடுகளை அழித்துப் பயிர் செய்யாது அவற்றோடு இயைந்து வாழ்ந்து மந்தை மேய்த்தலை முதன்மைத் தொழிலாகச் செய்து இயற்கை நாட்டம் பேணினர். வளம் நிறைந்த மருத நிலத்தோர் உழவுத் தொழிலைச் செய்தனர். இவர்களுக்கு ஓய்வுநேரம் அதிகம் கிடைத்தமையால் கலைகளில் ஈடுபட்டதுடன் சிந்திக்கவும் தொடங்கினர். நெய்தல் நிலத்தில் வாழ்ந்த மக்கள் சங்கு எடுத்தல், உப்பு விளைவித்தல், முத்துக் குளித்தல் போன்ற பொருளாதார வளம்மிக்க தொழில்களைச் செய்தனர்.

 ‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து பாலை என்பதோர் வடிவம் கொள்ளுமே’

என்ற சிலப்பதிகார வரிகள் முல்லை நிலத்திற்கும் குறிஞ்சி நிலத்திற்குமிடையில் பாலை நிலம் அமைந்ததாகவும் இருநிலத்தோரும் தமது நிலங்களில் உற்பத்தி செய்யும் பொருட்களை மற்ற நிலத்தில் பண்டமாற்றுச் செய்யச் செல்லும் போது பாலை நிலைத்தினூடாகச் சென்றனர். இயல்பாகவே வளமற்ற பாலை நில மக்கள் அவர்களிடமிருந்து அப்பொருட்களைச் சூறையாடி தமது வாழ்வை நடத்தினர் எனக் கூறப்படுகின்றது. தொடக்க காலத்தில் பாலை நில மக்களைத் தவிர நான்கு நிலங்களில் வாழ்ந்த மக்களும் தமது தொழில் மூலம் வளமாகவும் மகிழ்வாகவும் வாழ்ந்துள்ளனர்.

இல்லற வாழ்வு என்பது காதலுடன் மலர்ந்துள்ளது. தமிழர் வாழ்வில் கணவன் மனைவியரிடையே காணப்பட்ட அன்பின் நெருக்கத்தையும் உறவின் வலியையும் ஐவகை நிலங்களுக்குமுரிய அக ஒழுக்கங்களான குறிஞ்சிக்குப் புணர்தலும், முல்லைக்கு இருத்தலும், மருதத்திற்கு ஊடலும் நெய்தலுக்கு இரங்கலும் பாலைக்குப் பிரிதலும் சிறப்பான உரிய ஒழுக்கங்களாக உள்ளன. இவற்றை ‘அன்பின் ஐந்திணை’ என்று சிறப்பித்துக் கூறப்படுவது தமிழருக்குரிய சிறப்பான அம்சமாகும். மேலும் காதலின் வலிமையைக் கைக்கிளை, பெருந்திணை என்பனவும் உணர்த்துகின்றன. தம் காதல் நிறைவேறாத போது மடலேறுதல், வரைபாய்தல் மூலம் தம்முயிரை மாய்த்தமை, ஆடவரின் அற்புதக் காதல் உணர்வை எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன் குறிஞ்சி நிலத்தில் களவொழுக்கம் மேலோங்கிக் காணப்பட்டதுடன் பரத்தையர் ஒழுக்கமும் குறிப்பிடத்தக்கது. சங்க காலத் தமிழ் மக்களின் வாழ்வில் போரும் வீரமும் எவ்வளவு பெரிதாகப் போற்றப்பட்டன என்பதற்கு

'களிநெறிந்து பட்டனளென்னு உவகை ஈன்ற ஞான்றிலும் பெரிதே'

என்ற புறநானூற்று அடிகள் சான்று பகர்கின்றன. அதாவது தன் மகன் போரில் வீரத்தடன் இறந்த செய்தி கேட்டு தான் பெற்ற பொழுதைவிட மகிழ்ச்சி அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளமை சங்கத்தமிழரின் வீரத்தை எடுத்துக்காட்டுகிறது.

சங்ககால மக்கள் ஐவகை நிலங்களுக்கும் தனித்தனிக் கடவுளரை வழிபட்டனர். குறிஞ்சி - சேயோன், முல்லை - திருமால், நெய்தல் - வர்ணன், மருதம் - இந்திரன், பாலை - கொற்றவை என்றவாறு வழிபாடுகள் காணப்பட்டன. இது அவர்களிடையே மத முரண்பாடுகளின்றி வாழ்வு மகிழ்வுறக் காரணமானது எனலாம். இன்று பல்வேறு பதவிகளும் மக்கள் வாழ்வை நெறிப்படுத்துவதற்குப் பதிலாக முரண்பாடுகளையும் சிக்கல்களையும் ஏற்படுத்தும் நிலையில் சங்கத் தமிழர் சமய வாழ்வு, சுகவாழ்வு மிக்கதாக உள்ளமை போற்றுதற்குரியதாகும்.

 சங்ககாலக் குறுநில மன்னர்களான பாரி, பேகன் அதியமான் போன்றோர் முறையே கபிலர், பரணர், ஒளவையார் போன்ற புலவர்களை ஆதரித்தனர். மேலும் மருத நிலத் தலைவன் பாணர், கூத்தர் போன்றோரை ஆதரித்தான் என்பது இவ்விடத்தில் கவனிக்கத்தக்கது. இது சங்கத் தமிழர்கள் இரக்கம் கொண்டு ஏழைகளுக்குக் கொடை வழங்கி அறம் செய்து காத்தனர் என்ற விடயத்தை வெளிப்படையாக உணர்த்துகின்றது.

‘எத்துணையாயினும்ஈத்தல் நன்றென

மறுமை நோக்கின்றோ வன்றே

பிறர் வறுமை நோக்கின் நவன்கை வண்ணம் '

 எனப் பரணர் பேகனின் கொடைச் சிறப்பைப் போற்றியுள்ளார்.

இது மட்டுமா சங்ககாலத்தமிழர் அமைதி, ஒற்றுமை என்பவற்றிலும் உயர்ந்து விளங்கினர்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’

என்ற கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடல் உலகிற்கே சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் முதன்முதலில் எடுத்துக்கூறிய பெருமைக்குரியது. இவ்வாறாகச் சங்கத் தமிழர் வாழ்வும் வளமும் தனித்துவமான அடையாளங்களுடனும் சிறப்பம்சங்களுடனும் இன்றும் இவர்கள் வாழ்வை எண்ணி இன்புறும் அளவிற்கு இலக்கியங்கள் இனிதே எடுத்தியம்புகின்றன. எனவே தான் 'தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கொரு கலையுண்டு, அமிழ்தம் அவனுடைய மொழியாகும் அன்பே அவனது வழியாகும்' என்ற பெருமிதத்துடன் தமிழரின் பெருமையை உலகறியச் செய்வோமாக.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே - அதன்

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

முடிந்ததும் இந்நாடே - அவர்

சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து

சிறந்ததும் இந்நாடே - இதை வந்தனை கூறி மனதில் இருத்தி

என் வாயுற வாழ்த்தேனோ ! – பாரதியார்

ஆக்கம்: ஆசிரியர் சுலோசனா லோகன்

Show More

Share by: